ஒரே ஓவரில் 4, 4, 6, 4, 4.. திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.. டெஸ்ட் போட்டியில் டி20 ஆட்டதை ஆடி தெறிக்கவிட்ட ரிஷப் பண்ட்!
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது அதிரடியை வெளிப்படுத்தி இருக்கிறார் இளம் வீரர் ரிஷப் பண்ட்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி ஒருநாள் போட்டி, டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் கட்டமாக ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் நடந்து முடிந்துவிட்டன. வருகிற டிசம்பர் 17ஆம் தேதி டெஸ்ட் போட்டிகள் துவங்கவிருக்கிறது. அதற்கு முன்னதாக மூன்று நாள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் விளையாடி வருகிறது.
இதில் தற்போது 2-வது பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சில் 194 ரன்கள் எடுத்தது. இதற்கு அடுத்ததாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இந்திய பந்து வீச்சாளர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகளை இழந்து வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 86 ரன்கள் முன்னிலை பெற்று இந்திய அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இரண்டாவது இன்னிங்சில் பிரித்வி ஷா வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் நிலைத்து ஆடி அரைசதம் கடந்தனர். அகர்வால் 61 ரன்களும், சுப்மன் கில் 65 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஹனுமா விஹாரி மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இதில் ஒரு பக்கம் நிலையான இன்னிங்ஸ் ஆடிவந்த ஹனுமா விஹாரி சதமடித்தார். மறுமுனையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விளையாடிவரும் ரிஷப் பண்ட் தனது அதிரடியை வெளிப்படுத்தி 73 பந்துகளில் சதமடித்தார்.
ரிஷப் இரண்டாம் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என மொத்தம் 22 ரன்கள் அடிக்க இவரது ஸ்கோர் சதத்தை எட்டியது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஹனுமா விஹாரி 104 ரன்கள் எடுத்திருந்தார். ரிஷப் பண்ட் 73 பந்துகளில் 103 ரன்கள் எடுத்திருந்தார். இவர் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் எடுத்து, மொத்தம் 472 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரிஷப் பண்ட் தனது அதிரடியை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தது பலரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. இதற்காக முன்னாள் வீரர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.