தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடிப்பதற்காக தற்போதைய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் காத்திருக்கிறார்.
2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்து வந்த மகேந்திர சிங் தோனி, அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இந்திய டெஸ்ட் அணியை டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் முறையாக முதல் இடத்திற்கு கொண்டு சென்ற பெருமை மகேந்திர சிங் தோனியை சேரும். இதுமட்டுமல்லாது, டெஸ்ட் போட்டிகளில் எண்ணற்ற பல சாதனைகளை தனது பேட்டிங் மற்றும் கீப்பங்கில் நிகழ்த்தி இருக்கிறார் மகேந்திர சிங் தோனி.
குறிப்பாக முதல் 100 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு மகேந்திர சிங் தோனி 36 டெஸ்ட் போட்டிகளை எடுத்துக்கொண்டார். தற்போது முதன்மை விக்கெட் கீப்பராக இருந்துவரும் ரிஷப் பண்ட் இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 89 கேட்ச் மற்றும் 8 ஸ்டம்பிங் என மொத்தம் 97 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரின்போது இன்னும் 3 விக்கெட்டுகளை ரிஷப் பண்ட் வீழ்த்துவதன் மூலம், அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் என சாதனை படைக்கலாம். நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் இந்த சாதனைய படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்து டெஸ்ட் தொடரின்போது ரிஷப் பண்ட் ஓய்வில் இருந்தார்.
காயம் காரணமாக விருத்திமான் சஹா டெஸ்ட் போட்டிகளில் இடம் பெற முடியாமல் தவித்து வந்தபோது, ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்பட்டார். தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் மற்றும் அரைசதங்கள் விளாசியதால், இந்திய டெஸ்ட் அணியில் இவருக்கு நிரந்தர இடம் கொடுக்கப்பட்டது. கீப்பிங்கிலும் இவர் அசத்தியதன் காரணமாக தொடர்ந்து முதன்மை விக்கெட் கீப்பர் ஆகவே மாறியிருக்கிறார். ரிஷப் பண்டிற்கு ஓய்வு அளிக்கப்படும் போது மட்டுமே விருத்திமான் சஹா இப்போது உள்ளே விளையாடி வருகிறார்.
ரிஷப் பண்ட் இங்கிலாந்தில் மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார். மேலும் இந்தியா வந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இவரது பங்களிப்பு அபாரமாக இருந்தது. ரிஷப் பண்ட் தற்போது இந்திய அணியின் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் முன்னணி விக்கெட் கீப்பராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.