ரிஷப் பண்ட்டை லிமிடெட் ஓவர் போட்டிகளில் துவக்க வீரராக களமிறக்கினால் நன்றாக இருக்கும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சமீபமாகவே அதிகம் விமர்சிக்கப்பட்ட வீரர்களில் ஒருவராக வலம் வந்த இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், பேட்டிங்கில் சரியான முறையில் விளையாடுவதில்லை, அடித்து ஆட வேண்டும் என்று தன்னுடைய விக்கெட்டை இழந்து விடுகிறார் என்று விமர்சிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அனைவருடைய விமர்சனத்தையும் தவிடுபொடியாக்கும் வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான விடுபட்ட ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அசத்தலாக செயல்பட்டு தன்னுடைய திறமையை தெரியப்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 89 பந்துகளில் சதத்தை கடந்த ரிஷப் பண்ட் மொத்தம் 146 ரன்கள் எடுத்து தன்னுடைய விக்கெட்டை இழந்தார். அதற்குப்பின் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் அரை சதம் அடித்தும் அசத்தியுள்ளார்.
என்னதான் இவர் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக செயல்பட்டாலும் லிமிடெட் பூவர் போட்டிகளில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை, கடந்த தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரிலும்,அதற்கு முன் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் இவருடைய பேட்டி மிகவும் சுமாராகவே இருந்தது.
இதனால் லிமிடெட் ஓவர் போட்டியில் இவரை லோயர் மிடில் ஆர்டரில் களமிறக்காமல் சற்று முன்பாகவே களமிறக்கினால் நன்றாக இருக்கும் என்று பலரும் இந்திய அணிக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் லிமிடெட் ஓவர் போட்டியில் ரிஷப் பண்டை துவக்க வீரராக களமிறக்கினால் இன்னும் சிறப்பாக செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுனில் கவாஸ்கர் தெரிவித்ததாவது, “இது ஒரு மோசமான முடிவாக இருக்காது என்று கருதுகிறேன், ஆஸ்திரேலியா அணியில் முன்னாள் நட்சத்திர வீரர் ஆடம் கில்கிரிஸ்ட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக 6 அல்லது 7வது இடத்தில் களமிறங்குவார், ஆனால் லிமிடெட் ஓவர் போட்டியில் அவர் துவக்க வீரராக களமிறங்கி ஆஸ்திரேலியா அணிக்கு நல்ல துவக்கத்தை ஏற்படுத்தி கொடுப்பார். அதேபோன்ற தாக்கத்தை ரிஷப் பண்ட்டும் செய்வார், அவர் மட்டும் துவக்க வீரராக களமிறங்கினால் அவர் விளையாடுவதற்கு அதிகமான ஓவர்கள் கிடைக்கும், அவர் பினிஷராக செயல்பட்டதை நாம் பலமுறை பேசியிருந்தோம், அடித்து விளையாட வேண்டும் என்று தன்னுடைய விக்கெட்டை இழந்து விடுகிறார். அவர் களமிறங்கும் இடத்தில் பொறுமையாக விளையாட வேண்டும் என்று அவருக்கு தோனுவது கிடையாது, முதல் பந்தில் இருந்தே அடித்து ஆட வேண்டும் என்று முயற்சிக்கிறார், இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவருக்கான தருணம் அமைந்துள்ளது இதனால் ரிஷப் பண்ட்டை வைத்து அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.