தினேஷ் கார்த்திக்கை பாத்து கத்துக்கோ.. இல்லைனா டீம விட்டு தூக்கிருவாங்க – இளம் இந்திய வீரரை எச்சரித்த அஜய் ஜடேஜா!

தினேஷ் கார்த்திக் பார்த்து ரிஷப் பன்ட் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அணியை விட்டு தூக்கியேறிந்திடுவார்கள் என எச்சரித்திருக்கிறார் அஜய் ஜடேஜா.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முன்னணி இந்திய வீரர்கள் கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவரும் வெளியில் அமர்த்தப்பட்டு இருந்தனர். இந்த தருணத்தில் ரிஷப் பண்ட் துவக்க வீரராக களம் இறக்கப்பட்டார். தினேஷ் கார்த்திக் நான்காவது இடத்தில் களமிறங்கினார்.

டி20 உலக கோப்பை பிளேயிங் லெவனில் ரிஷப் பன்ட் அல்லது தினேஷ் கார்த்திக் யாரேனும் ஒருவரை மட்டுமே விளையாட வைக்க முடியும் என்ற விவாதங்கள் நிலவி வருகின்றன. ஏனெனில் இருவரும் ஒரே மாதிரியான வீரர்கள் யாரேனும் ஒருவரை உள்ளே வைத்துவிட்டு, மற்றொருவருக்கு பதிலாக கூடுதல் பந்துவீச்சாளரை எடுத்து வந்தால் ஆஸ்திரேலிய மைதானங்களில் சாதகமாக இருக்கும் என இந்த விவாதத்தின் போது கருத்துக்கள் நிலவி வந்தது.

இருப்பினும் இரண்டு வீரர்களுக்கும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான டி20 தொடரின் போது வாய்ப்பு கொடுத்து பார்க்கப்பட்டது. தினேஷ் கார்த்திக் கிடைக்கும் வாய்ப்புகளை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஆனால் ரிஷப் பண்ட் அதனை தவறவிட்டிருக்கிறார். குறிப்பாக மூன்றாவது டி20 போட்டியில் துவக்க வீரராக இறங்குவதற்கு வாய்ப்பு கிடைத்த போது 14 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அவர் ரன்களை அடித்து இருந்தால், அணி நிர்வாகத்திற்கு நம்பிக்கை பிறந்திருக்கும். அதனை தவற விட்டிருக்கிறார். ஆனால் தினேஷ் கார்த்திக் அதிரடியை வெளிப்படுத்தி 21 பந்துகளில் 46 ரன்கள் விளாசினார். ரிஷப் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவருக்கும் இடையே நிலவிவரும் போட்டியில் தினேஷ் கார்த்திக் கூடுதல் நம்பிக்கையளிக்கும் விதமாக விளையாடுகிறார்.

இதனை குறிப்பிட்டு பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, “ரிஷப் பண்ட் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை தவறவிட்டு வருகிறார். தினேஷ் கார்த்திக் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக இந்திய அணியில் அவ்வப்போது உள்ளே வருவதும் வெளியே செல்வதுமாக இருக்கிறார். தற்போது அவர்மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து இந்திய அணி அவருக்கு வாய்ப்பு கொடுக்கிறது. தினேஷ் கார்த்திக் மீது நம்பிக்கை வருவதற்கு கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் ஆனது. ஆகையால் ரிஷப் பன்ட் மீது தற்போது நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போது ஒன்றும் பெரிய தவறாக முடியவில்லை. மீண்டும் கிடைக்கும் வாய்ப்புகளில் தன்னை நிரூபித்து காட்ட வேண்டும். இல்லையெனில் மொத்தமாக அணியிலிருந்து அவரை நீக்குவதற்கும் இந்திய அணி நிர்வாகம் தயங்காது.” என எச்சரித்திருக்கிறார்.

Mohamed:

This website uses cookies.