அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவிப்பதாக ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
2002 ஆம் ஆண்டு முதல் தர போட்டி மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடத் தொடங்கிய ராபின் உத்தப்பா 2006 ஆம் ஆண்டு சர்வதேச இந்திய அணிக்காக தன்னுடைய முதல் ஒருநாள் போட்டியை விளையாட துவங்கினார்.
இவருடைய சிறப்பான ஆட்டத்தை புரிந்து கொண்ட இந்திய அணி தேர்வாளர்கள் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு அளித்தனர்.
இந்தத் தொடரில் முக்கியமான சில போட்டிகளில் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த ராபின் உத்தப்பா இந்திய அணி உலக கோப்பை வெல்வதற்கு காரணமாகவும் திகழ்ந்தார்.
ஆனால் 2007 உலகத் கோப்பை தொடருக்குப்பின் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இவர் விளையாடவில்லை என்பதால் அதற்குப் பின் இவருக்கு இந்திய அணியில் ரெகுலராக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒரு சில போட்டிகளில் பங்கேற்று விளையாடு இருந்தார். அதற்குப்பின் உள்ளூர் போட்டிகளில் அதிகமாக கவனம் செலுத்தி விளையாடி வந்த ராபின் உத்தப்பா ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு முக்கிய பங்காற்றினர்.
அதிரடி வீரராக அறியப்பட்ட ராபின் உத்தப்பா தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.இவர் மும்பை இந்தியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பூனே போன்ற முக்கிய அணிகளிலும் இடம் பெற்று விளையாடியுள்ளார்.
இந்த நிலையில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவிப்பதாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில்,“20 வருடங்களாக நான் கிரிக்கெட் விளையாடி வருகிறேன், என்னுடைய நாட்டிற்காகவும் என்னுடைய மாநிலத்திற்காகவும் விளையாடியதை நினைத்து பெருமைப்படுகிறேன், சில ஏற்றத்தாழ்வுகளுடன் நடைபெற்ற இந்த சுவாரஸ்யமான பயணம் தற்பொழுது முடிவு பெற்றுவிட்டது.இதில் மகிழ்ச்சியான பல தருணங்கள் மற்றும் பாராட்டுக்கள் நான் நல்லமனித பிறவியாக வளர்வதற்கு உறுதுணையாக இருந்தது, எல்லா நல்ல விஷயமும் என்றாவது ஒருநாள் முடிவுக்கு வரும், அதே போன்று தான் தற்பொழுது நான் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவிக்கிறேன், இனிமேல் நான் என்னுடைய குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட விரும்புகிறேன், வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை துவங்கப் போகிறேன். இந்த தருணத்தில் நான் பிசிசிஐ பிரசிடென்ட், செக்ரட்டரிக்கும் மற்றும் என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கர்நாடகா கிரிக்கெட் அசோசியேசனுக்கும், சௌராஷ்டிரா மற்றும் கேரளா அசோசியேசனுக்கும் என்னுடைய மரியாதை கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் ஐபிஎல் தொடரில் என்னை ரெப்ரசன்ட் (Represent) செய்த MI,RCB,PWI,RR அணிக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக கொல்கத்தா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என்னுடைய தனிப்பட்ட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் என்னுடைய குடும்பத்தார்கள் மற்றும் சகோதரிகளுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டவனாக உள்ளேன், அவர்கள் தான் என்னுடைய லட்சியத்தை நோக்கி பயணிப்பதற்கு உறுதுணையாக இருந்தனர். அதற்காக பல தியாகங்களையும் செய்துள்ளனர். மேலும் என்னுடைய பயிற்சியாளர் ஆலோசகர்கள் என அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராபின் உத்தப்பா நீண்ட நன்றியோடு தன்னுடைய ஓய்வை அறிவித்திருந்தார்.
இந்திய அணியிடமிருந்து தடையில்லா சர்டிபிகேட்(NOC) வாங்கிய ராபின் உத்தப்பா, இனி உலகின் பல்வேறு திசைகளிலும் நடக்கும் லீக் தொடர்களில் விளையாடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.