ராஜஸ்தான் அணியின் கேதர் ஜாதவ் இவர் தான்; சீனியர் வீரரை வச்சு செய்யும் ரசிகர்கள்
தொடர்ந்து சொதப்பி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சீனியர் வீரர் ராபின் உத்தப்பாவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வச்சு செய்து வருகின்றனர்.
கடந்த ஐபிஎல் தொடர்களில் கொல்கத்தா நைட் அணிக்காக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான ராபின் உத்தப்பா, நடப்பு தொடரில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மிடில் ஆர்டரில் களமிறங்கி வரும் ராபின் உத்தப்பா, இதுவரை ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.
தொடர்ந்து மூன்று போட்டிகளில் சொதப்பிய உத்தப்பா, பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலும் 17 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் பட்லர் (22), ஸ்மித் (5), சாம்சன் (4) குறைந்த ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அதனால் அந்த அணி 31 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அந்த நேரத்தில் இளம் வீரர் லோம்ரார் உடன் ராபின் உத்தப்பா ஜோடி சேர்ந்தார். லோம்ரார் சற்றே அடித்து விளையாட சிறிது நேரம் ஒத்துழைப்பு அளித்த உத்தப்பா, பொறுப்பற்ற முறையில் 22 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து மீண்டும் ஏமாற்றம் அளித்தார்.
இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடியும் வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமே இன்றைய போட்டியில் அடித்த 17 ரன்கள்தான். இந்தப் போட்டி தொடங்கியபோது ராபின் உத்தப்பாவிற்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டதை பலரும் விமர்சித்து இருந்தனர். தொடர்ந்து சொதப்பி வரும் அவருக்கு ஏன் மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினர். அந்த விமர்சனத்தை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார் உத்தப்பா.
இன்றைய போட்டியிலும் ராபின் உத்தப்பாவின் மோசமான ஆட்டத்தால் கடுப்பான ரசிகர்கள், மூன்று கோடி ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்ட ராபின் உத்தப்பா தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேதர் ஜாதவ் என்ற அளவிற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வச்சு செய்து வருகின்றனர்.