ஐ.பி.எல் டி.20 அரங்கில் புதிய சாதனை படைத்தார் ராபின் உத்தப்பா !!

ஐ.பி.எல் டி.20 அரங்கில் புதிய சாதனை படைத்தார் ராபின் உத்தப்பா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பா ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கொல்கத்தா அணி வீரர் ராபின் உத்தப்பா 54 ரன்கள் எடுத்தார். இதில் 17 ரன்கள் எடுக்கும் போது ராபின் உத்தப்பா புதிய மைல் கல்லை எட்டினார். அவர் ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்த ஆறாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இதுவரை 153 ஐபிஎல் போட்டிகளில் பேட்டிங் செய்துள்ள ராபின் உத்தப்பா 4037 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 23 அரைசதங்கள் அடங்கும். உத்தப்பாவை தவிர டேவிட் வார்னர் (114 போட்டி), விராட் கோலி (128 போட்டி), சுரேஷ் ரெய்னா (140 போட்டி), கவுதம் காம்பீர் (140 போட்டி), ரோகித் சர்மா (147 போட்டி) ஆகியோரும் 4 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர். டோனி மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோரும் 3900 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர். அவர்களும் இந்த சீசனிலேயே 4 ஆயிரம் ரன்களை கடக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.