ரோகித் சர்மா கேப்டன் ஆனதில் இருந்து.. மும்பை இந்தியன்ஸ் அணியை விடாமல் துரத்தும் சாபம்… 5 முறை கப் அடிச்சாலும், இந்த சாபம் இன்னும் போகவில்லை!

2013ம் ஆண்டில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 11 சீசன்களாக முதல் போட்டியில தோல்வியை தழுவி மோசமான வரலாறு படைத்திருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2013ஆம் ஆண்டு முதன்முறையாக ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பேற்றார். தொடர்ந்து 11ஆவது சீசனாக கேப்டன் பொறுப்பில் விளையாடி வருகிறார்.

இதுவரை 149 போட்டிகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பேற்று விளையாடியுள்ள ரோகித் சர்மா, கிட்டத்தட்ட 62% போட்டிகளில் வெற்றியை பெற்றுத்தந்திருக்கிறார். ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் கோப்பை, ஒருமுறை சாம்பியன்ஸ் லீக் கோப்பை பெற்றுத்தந்திருக்கிறார். வேறு எந்தவொரு கேப்டனும் இவ்வளவு கோப்பைகளை ஒரு அணிக்காக பெற்றுத்தந்ததில்லை.

இவ்வளவு சிறப்புமிக்க மற்றும் வெற்றிகரமான கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இருந்து வரும் ரோகித் சர்மாவிற்கு, கேப்டன் பொறுப்பேற்ற முதல் சீசனில் இருந்து ஒரு சாபம் விடாமல் துரத்தி வருகிறது. அதாவது, இவர் கேப்டன் பொறுப்பேற்று விளையாடிய முதல் சீசனில் இருந்து தற்போது வரை, அனைத்து சீசன்களின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது.

2023 சீசனின் முதல் போட்டியில் ஆர்சிபி அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் வெற்றிபெற்று, இந்த வருடமாவது அந்த சாபத்தை நீக்குவாரா? இந்த மோசமான அவப்பெயருக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? என்று ரோகித் சர்மா மீது எதிர்பார்ப்பு நிலவியது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் அடித்தது. 172 ரன்கள் இலக்கை சேஸ் செய்த ஆர்சிபி, 16.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.

இதனால் மற்றுமொரு சீசனின் முதல் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவி இருக்கிறது. தொடர்ந்து 11 சீசன்களாக முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவி மோசமான வரலாற்றையும் படைத்திருக்கிறது. வேறு எந்த அணியும் இத்தனை சீசன்களில் தனது முதல் போட்டியில் தோல்வியை தழுவியதில்லை.

Mohamed:

This website uses cookies.