குல்தீப், ரோஹித் டெஸ்ட் அணியிலும் விளையாட வேண்டும்; கவாஸ்கர் சொல்கிறார்
ரோஹித் சர்மா மற்றும் குல்தீப் யாதவ் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வச்ருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி ஒருநாள் தொடரையும் வெற்றியுடன் துவங்கியுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியுடனான இந்த தொடரில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வரும் குல்தீப் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு டெஸ்ட் அணியிலும் இடம் கிடைக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது, “பந்துவீச்சில் குல்தீப் யாதவும், பேட்டிங்கில் ரோஹித் சர்மாவும் தங்களது சிறப்பான ஆட்டம் மூலம் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகின்றனர். இங்கிலாந்து அணிக்கு கடும் சவாலாக விளங்கி வரும் குல்தீப் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலும் இடம் கிடைக்க வேண்டும். அவர்கள் இருவரும் டெஸ்ட் அணியில் இடம்பெறுவது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தையே கொடுக்கும்” என்றார்.