பொளந்துகட்டிய ரோகித் சர்மா, கிங் கோலி தரமான ஃபினிஷ்… 35 ஓவர்களில் இந்தியா அபார வெற்றி!

ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்த 273 ரன்கள் இலக்கை 35 ஓவர்களில் சேஸ் செய்து 8 விக்கெடுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி.

டெல்லியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இரு அணிகளுக்கும் இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் இறங்கியது. ஆப்கன் அணிக்கு அதிகபட்சமாக ஷாகிதி 80 ரன்கள் ஒமர்சாய் 62 ரன்கள் அடித்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

மற்ற பேட்ஸ்மேன்கள் ஆங்காங்கே சிறுசிறு பங்களிப்பை கொடுக்க 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெடுகள் இழப்பிற்கு 272 ரன்கள் அடித்திருந்தது.

273 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரும் களம் இறங்கினர். இதில் இஷான் கிஷன் ஒரு பக்கம் நிதானமாக விக்கெட் கொடுக்காமல் விளையாடி வந்தார். மறுபக்கம் துவக்கம் முதலே பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விலாசி வந்த ரோகித் சர்மா 30 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

தொடர்ந்து வெளுத்து வாங்கிய ரோகித் சர்மா 63 பந்துகளில் சதம் அடித்து உலகக்கோப்பையில் தனது 7ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். ஒட்டுமொத்தமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இவர் அடிக்கும் 31ஆவது சதம் இதுவாகும். இதே நேரம் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களையும் கடந்து சாதனையை படைத்தார்.

தடுமாற்றத்திற்கு பிறகு சற்று அதிரடியாக விளையாட ஆரம்பித்த இஷான் கிஷன் துரதிஷ்டவசமாக 47 ரன்கள் அடித்திருந்தபோது, ரஷீத் கான் பந்தில் அவுட் ஆனார். முதல் விக்கெட்டிற்கு ரோகித் சர்மா இஷான் கிஷன் ஜோடி 156 ரன்கள் விளாசியது.

அடுத்து உள்ளே வந்த விராட் கோலி நிதானமாக ரன் குவிக்க ஆரம்பித்தார். சதம் கடந்து விளையாடி வந்த ரோகித் சர்மா 84 பந்துகளுக்கு 131 ரன்கள் அடித்து அவுட் ஆனார். இவர் 16 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் அடித்திருந்தார்.

ரோகித் சர்மா ஆட்டமிழந்ததும் உள்ளே வந்த ஷ்ரேயாஸ் ஐயர் களத்தில் இருந்த விராட் கோலி உடன் ஜோடி சேர்ந்து ரன் குறிப்பில் ஈடுபட 35 ஓவர்களில் இலக்கை எட்டிய இந்திய அணி 273 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தார்கள். விராட் கோலி 55 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 25 ரன்களும் அடித்து இறுதிவரை களத்தில் இருந்தனர்.

Mohamed:

This website uses cookies.