2007ல் இந்தியா உலகக்கோப்பையை வென்றது இவர்களால் தான்; 13 வருட ரகசியத்தை உடைத்த ரோகித் சர்மா!
2007ல் முதன்முறையாக இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தது இவர்கள்தான் என மனம் திறந்து பேசியுள்ளார் ரோகித் சர்மா.
2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பெரிய எதிர்பார்ப்பு இன்றி, இளம்வீரர்களை மட்டுமே கொண்டு தோனி தலைமையில் களம் கண்டது. அதற்கு முன் இந்திய அணி ஓரிரு டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி இருந்தது. மேலும், அத்தகைய காலகட்டத்தில் இந்திய அணி கிரிக்கெட் உலகில் சொதப்பலான அணியாகவே இருந்தது.
ரசிகர்கள் மத்தியில் இருக்கும் இத்தகைய பிம்பத்தை கலைக்கும் விதமாக முதன்முறையாக, இந்திய அணி முதல் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது. அதுவும் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியதால் மிகவும் சிறப்பான ஒன்றாக கருதப்பட்டது.
இந்த தொடரின் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. ஆஸ்திரேலியா பலம்மிக்க அணி என்பதால், கத்துக்குட்டி அணியான இந்தியாவால் அதனை வெல்வது மிகவும் கடினம் எனவும் கருதப்பட்டது. ஆனாலும், இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
அந்த போட்டியின் அனுபவத்தை அண்மையில், இன்ஸ்டாகிராம் நேரலையில் பகிர்ந்துகொண்டார் இந்திய வீரர் ரோகித் சர்மா.
அவர் கூறுகையில், “மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவை நாம் அனைவரும் காணும்வரையில் நாம் இந்திய அணிக்காக விளையாடுகிறோம் என்பதை ஒருபோதும் உணர மாட்டோம். கடந்த 2007ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணி வெற்றி பெற்ற போது, இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு வெளியே நின்ற ரசிகர்கள் கூட்டத்தை கண்டு அதிர்ந்து போனேன்.
இதற்கு முன்பாக நான் விளையாடிய இத்தனை ஆண்டுகளில் இப்படி ஒரு கூட்டத்த பார்த்ததில்லை. ஓட்டலை சுற்றி நின்ற ரசிகர்கள் நடனமாடி வெற்றி மகிழ்ச்சியை கொண்டாடினர். அப்போது தான் புரிந்துகொண்டேன் ரசிகர்கள் வழங்கும் ஆதரவும், ஊக்கமும் தான், ஒரு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்று. உண்மையில் யாரும் கொடுத்திடாத ஒரு அனுபவம் எனக்கு” என்றார்.