தொடக்க வீரராக தன் புதிய பொறுப்பில் வலுவான தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சை நின்று நிதானித்து பிறகு அடித்தும், சொதப்பலான அந்த அணியின் சுழற்பந்து வீச்சை எடுத்த எடுப்பிலேயே பின்னி எடுத்தும் 3 டெஸ்ட் போட்டிகளில் 529 ரன்களை எடுத்த ரோஹித் சர்மா அனைத்து வடிவங்களிலும் ஐசிசி தரவரிசையில் இப்போது டாப் 10-ல் இடம்பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கவுதம் கம்பீர், விராட் கோலிதான் மூன்று வடிவங்களிலும் டாப் 10-ல் இடம்பெற்றவர்களாவார்கள்.
கோலி முன்பாக அனைத்து வடிவங்களிலும் நம்பர் 1 இடத்தில் இருந்தார். தற்போது ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் தரவரிசையில் 937 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்க விராட் கோலி 926 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் இருக்கிறார்.
ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் தற்போது டாப் 10-ல் 10ம் இடத்தில் இருக்கிறார், ஒருநாள் கிரிக்கெட்டில் 2ம் இடத்திலும் டி20-யில் 7ம் இடத்திலும் உள்ளார்.
இந்தத் தொடர் தொடங்கும்போது ரோஹித் சர்மா டெஸ்ட் தரவரிசையில் 44ம் இடத்தில் இருந்தார், ஆனால் தென் ஆப்பிரிக்காவின் கைங்கரியத்தில் 34 இடங்கள் முன்னேறி 10ம் இடத்துக்குத் தாவியுள்ளார்.
விரேந்திர சேவாக் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே தொடரில் 544 ரன்கள் (3 டெஸ்ட் தொடர்) எடுத்த பிறகு ரோஹித் சர்மா 539 ரன்கள் எடுத்தார்.
அதே போல் ஐசிசி தரவரிசை டாப் 10-ல் இந்திய பேட்டிங் வரிசையின் ஆதிக்கம் வலுவாக உள்ளது, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 216 ரன்கள் எடுத்த ரஹானே 5ம் இடத்திலும் புஜாரா 4ம் இடத்திலும் உள்ளனர்.
Photo by Deepak Malik / SPORTZPICS for BCCI
பவுலர்கள் தரவரிசையில் ஷமி 15ம் இடத்துக்கும் உமேஷ் யாதவ் 24ம் இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். பும்ரா ஒரு இடம் பின்னடைந்து 4ம் இடத்திலும் ரபாடா 2ம் இடத்திலும் 908 புள்ளிகளுடன் அசைக்க முடியா முதலிடத்தில் ஆஸி.யின் பாட் கமின்ஸும் உள்ளனர்.