ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் இருவரும் எனக்கு நன்றாக சப்போர்ட் செய்தார்கள். பின்னர் என்னை தூக்கிவிட்டு சுப்மன் கில்லை ஆட வைத்திருக்கிறார்கள். கிரிக்கெட்டில் இது காலம்காலமாக நடப்பதுதான் என தெளிவாக பேசியுள்ளார் ஷிக்கர் தவான்.
சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற பிறகு, இந்திய அணிக்கு முதன்மை துவக்க வீரராக ரோகித் சர்மா உடன் இணைந்து களமிறங்கியவர் ஷிக்கர் தவான். மூன்றுவித போட்டிகளிலும் விளையாட இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஷிக்கர் தவான்-க்கு குறைந்த வாய்ப்புகளே கிடைத்தது. பின்னர் தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். ஓபனிங் பேட்டிங்கில் ரோகித் சர்மாவுடன் இணைந்து பல சாதனைகளையும் செய்து காட்டியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் வரை முதன்மை துவக்க வீரராக ஒருநாள் போட்டிகளுக்கு இருந்து வந்த ஷிக்கர் தவான், தனது பார்மில் சற்று சரிவை சந்தித்ததால் வெளியில் அமர்த்தப்பட்டு சுப்மன் கில் மற்றும் இசான் கிஷன் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இருவருமே இரட்டை சதமடித்து வரலாற்று படைத்துவிட்டனர்.
ஆகையால் இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் ஷிக்கர் தவான் எடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டார். இந்திய அணியில் ஷிக்கர் தவான் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.
இன்னும் ஓரிரு வாரங்களில் ஐபிஎல் தொடர் துவங்கவுள்ள நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து வரும் ஷிக்கர் தவான் சமீபத்தில் பேட்டி அளித்தபோது, இந்திய அணியில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டது குறித்தும், சுப்மன் கில் நிரந்தர இடத்தை பிடித்துவிட்டது குறித்தும் கருத்து தெரிவித்தார். ஷிக்கர் தவான் பேசியதாவது:
“ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா இருவரும் எனக்கு நிறைய சப்போர்ட் செய்தார்கள். கடினமான சூழ்நிலையிலும் அவர்கள் கொடுத்த ஆதரவு என்னால் எப்போதும் மறக்க இயலாது. நான் எனது பேட்டிங்கில் சரிவை சந்தித்துக்கொண்டிருந்தபோது, அணியின் நலனுக்காக சுப்மன் கில்லை உள்ளே எடுத்து வந்தார்கள். என்னை விட அவரது ஆட்டம் சிறப்பாக இருந்ததாக அணி நிர்வாகம் உணர்ந்து அவரை விளையாட வைத்திருக்கலாம்.
சுப்மன் கில், கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி மிகச்சிறந்த பார்மில் இருந்து வருகிறார். இது காலம்காலமாக நடப்பது தான். ஒருவர் சரியாக விளையாடவில்லை என்றால், மற்றொரு வீரருக்கு விளையாட வாய்ப்புகள் கொடுப்பது கிரிக்கெட்டில் வழக்கமான நடப்பது தான். சுப்மன் கில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருவது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது. இறுதியாக, அணியின் வெற்றி தான் மிகவும் முக்கியம். நானாக இருந்தாலும் அதற்காகவே விளையாடி இருப்பேன்.” என்றார்.