ரோகித் சர்மா அரைசதம், கேமரூன் கிரீன் சதம் விளாசி மும்பைக்கு நம்பிக்கை கொடுக்க, 18 ஓவர்களில் 201 ரன்கள் இலக்கை கடந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனாலும் இன்னும் பிளே-ஆப் உறுதியாகவில்லை.
வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது.
ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, அடுத்து நடைபெறவிருக்கும் ஆர்சிபி மற்றும் குஜராத் இரு அணிகளுக்கு இடையேயான முடிவைப் பொறுத்து பிளே-ஆப் வாய்ப்பை பெறுமா? இல்லையா? என்பது உறுதியாகும்.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இம்முறை அதிரடியான அணுகுமுறையுடன் பேட்டிங் செய்தது. ஓப்பனிங் இறங்கிய விவ்ரந்த் ஷர்மா மற்றும் மயங்க் அகர்வால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 140 ரன்கள் அடித்து மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது.
ஆனால் அடுத்து வந்த வீரர்கள் இந்த துவக்கத்தை சரியாக எடுத்துச் செல்லவில்லை. அதிகபட்சமாக கிளாசன் 18 ரன்கள் அடித்தார். இறுதியாக 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களை அடித்தது ஹைதராபாத் அணி.
இந்த இலக்கை 11.5 ஓவர்களுக்குள் மும்பை அணி சேஸ் செய்தால் ஆர்சிபி அணியின் ரன்ரேட்டை விட முன்னே செல்லும் வாய்ப்பு இருந்தது. அதைக்கேற்றவாறு களமிறங்கி அதிரடியாகவும் ஆரம்பித்தது. துரதிஷ்டவசமாக இஷான் கிஷன் 14 ரன்களில் அவுட் ஆனார்.
ரோகித் சர்மா இந்த சீசன் முழுவதும் சரியான ஃபார்மில் இல்லை. ஆனால் இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி எட்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உட்பட 37 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார். கேமரூன் கிரீன் மற்றும் ரோகித் சர்மா ஜோடி இரண்டாவது விக்கெட்டிற்கு 128 ரன்கள் சேர்த்தது.
கேமரூன் கிரீன் 20 பந்துகளில் அரைசதம் கடந்தார். ரோகித் அவுட்டானப்பின் உள்ளே வந்த சூரியகுமார் யாதவ் உடன் சேர்ந்து போட்டியையும் பினிஷ் செய்தார். 18 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 201 ரன்கள் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று அதிரடி காட்டிய கேமரூன் கிரீன் 47 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். ஐபிஎல் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இவர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். 8 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. சூரியகுமார் யாதவ் இறுதிவரை களத்தில் நின்று 16 பந்துகளில் 25 ரன்கள் அடித்தார்.
11.5 ஓவர்களில் இலக்கை சேஸ் செய்யமுடியததால், மும்பை அணி ஆர்சிபி அணியை விட ரன்ரேட்டில் தற்போது வரை பின்தங்கியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு முன்னெறியுள்ளது. இருப்பினும் இன்னும் பிளே ஆப் வாய்ப்பு உறுதியாகவில்லை.
அடுதது நடைபெற உள்ள குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான வெற்றி தோல்வியை பொறுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிளே-ஆப் வாய்ப்பு உறுதியாகும். ஆர்சிபி அணி வெற்றி பெற்றுவிட்டால் மும்பை அணி நேரடியாக வெளியேறிவிடும். தோல்வியுறும் பட்சத்தில் மும்பை அணிக்கு பிளே-ஆப் வாய்ப்பு கிடைக்கும்.