சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரர் நிகழ்த்திய 23 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார் ஹிட்மேன் ரோகித் சர்மா.
லிமிடெட் ஓவர்களில் துவக்க வீரராக களமிறங்கி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் ரோகித் சர்மா, டெஸ்ட் அரங்கில் கடந்த சில வருடங்களாக நடுவரிசையில் இறக்கப்பட்டு வந்த ரோகித் சர்மா வந்தது தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பியது. இதனால் ரோகித் சர்மாவை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின்போது துவக்க வீரராக களமிறக்க ஆலோசனை நடத்தப்பட்டது. இதற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செவிசாய்க்கவில்லை. தொடர்ந்து ஐந்தாம் அல்லது ஆறாம் இடத்திலேயே இழுக்கப்பட்டு வந்தார்.
ஆனால், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன்பாக, “வருகின்ற தொடரில் ரோகித் சர்மா துவக்க வீரராக களம் இறங்குவார்” என பத்திரிகையாளர் சந்திப்பில் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
அதேபோல, முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து 176 ரன்கள் குவித்தார். துரதிஸ்டவசமாக, டெஸ்ட் போட்டியில் தனது முதல் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இருப்பினும் இரண்டாவது இன்னிங்சில் மீண்டும் நிதானமாக ஆடி சதம் அடித்தார். இம்முறை 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், முதல்முறையாக துவக்க வீரராக களமிறங்கி இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தது பெரும் பாராட்டுதலைப் பெற்றது.
இப்போட்டியில் மொத்தம் 33 பவுண்டரிகளையும் 13 சிக்ஸர்களையும் இவர் விளாசி இருக்கிறார். மொத்தம் 303 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் 23 வருட சாதனையை தகர்த்தெறிந்துள்ளார். அதாவது ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.
இதற்கு முன்னர் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் 1996 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒரே போட்டியில் 12 சிக்சர்கள் அடித்தது அதிகபட்சமாக இருந்தது. தற்போது இதனை தான் ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.