நான் ஆடியதிலேயே மிகவும் சவாலான ஆட்டம் இதுதான் என பத்திரிகையாளர் சந்திப்பில் மனம் திறந்துள்ளார் ரோகித் சர்மா.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி டெஸ்ட் அரங்கில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார் ரோஹித் சர்மா. இவர் 95 ரன்கள் இருக்கையில், சிக்சர் அடித்து சதம் பூர்த்தி செய்தார். அதேபோல் 199 ரன்களில் சிக்சர் அடித்து முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். முதல் இன்னிங்சில் இந்தியா 497 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
அதன் பிறகு, தென்னாபிரிக்கா அணி பேட்டிங் செய்தது. இரண்டாம் நாளில் 9/2 என இருக்கையில், மழை குறுக்கிட்டதால் அன்றைய நாளின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. போட்டி முடிந்த பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ரோஹித் சர்மா நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது நிருபர் ஒருவர் “ஒரே போட்டியில் மொத்த சாதனையையும் முறியடிக்க நினைக்கிறீரா?” என கேட்ட கேள்விக்கு, “கிடைக்கின்ற வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் பத்திரிகையாளர்கள் எவ்வாறு கிழித்து தொங்க விடுவார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். அவர்கள் வாயை அடைப்பதற்கு, நான் சரியாக செயல்பட்டு தானே ஆகவேண்டும்” என கிண்டலாக பதிலளித்தார்.
அதற்கு அடுத்ததாக, “டெஸ்டில் முதல் இரட்டை சதம் அடித்தது எப்படி இருக்கிறது?” என கேட்கப்பட்ட கேள்விக்கு, “நான் ஆடிய திலேயே மிகவும் சவாலான ஆட்டம் இது. அதேபோல, இது என் மனதை தொட்ட ஆட்டமும் கூட. இதுவரை ஆடியதை விட நான் கடைசியாக ஆடிய போட்டியை தான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். அது சதமாக இருந்தாலும் சரி; டக் அவுட் ஆனாலும் சரி” என்றார்.