நேற்றைய அயர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் முட்டை ரன் அடித்த ரோகித் சர்மா ஒரு மோசமான சாதனையில் தன் பெயரை பதிவு செய்துள்ளார்.
டி20 போட்டிகளில் அதிக டக் அடுத்த வீரர்கள் பட்டியலில் ஹர்பஜன் சிங்குடன் சேர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஹர்பஜன் சிங் 19 டக்குகள் அடித்துள்ளார். நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா டக் அடித்ததன் மூலம் 19 டக்குகள் பெற்று ஹர்பஜனுடன் சேர்ந்துள்ளார்.
முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) இரண்டாவது டி20 நடைபெற்றது.
டப்ளின் மைதானத்தில் நடைபெற்ற டாஸ் வென்ற அயர்லாந்து அணி இந்தியா பேட்டிங் செய்யப் அழைத்தது.
இந்தியா தொடக்க ஆட்டக்காரர்களான கேஎல் ராகுல் – விராத் கோலி ஆகியோர் களமிறங்கினர். 9 ரன்கள் எடுத்த நிலையில் கோலி ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய ரெய்னா – ராகுல் ஆகியோர் அதிரடி காட்டத் தொடங்கினர். இருவரும் மாறி மாறி பவுண்டரிகளும், சிக்சர்களும் பறக்க விட்ட நிலையில் அரைசதத்தை பூர்த்தி செய்தனர்.
ராகுல் 36 பந்துகளில் 70 ரன்களும், ரெய்னா 45 பந்துகளில் 69 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் வந்த ரோஹித் ஷர்மா ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய மணீஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் கடைசி கட்டத்தில் அதிரடி காட்ட ஸ்கோப் மளமள உயர்ந்தது. 200 ரன்களை கடந்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது.
இந்நிலையில், 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து வீரர்கள் தொடக்கத்திருந்தே தடுமாறினர். இந்திய பவுலர்களின் துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
12.3 ஓவர் முடிவில் 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தனர்.
இந்திய தரப்பில் சாஹல், குல்தீப் யாதவ் தலா 3, உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், சித்தார்த் கவுல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆட்டநாயகனாக கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருதை சாஹல் வென்றார்