புணேவில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது.
இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்து நேராக ரோஹித் சர்மா பக்கம் ஓடிவந்தார். முத்துசாமி ஆட்டமிழந்து பிலாண்டர் ஆடுகளத்துக்குள் நுழைந்தபோது இச்சம்பவம் நடைபெற்றது. ஸ்லிப் பகுதியில் நின்ற ரோஹித் சர்மாவின் காலில் விழுந்து வணங்கினார் அந்த ரசிகர். பிறகு காவலர்கள் அந்த ரசிகரை அழைத்துச் சென்றார்கள்.
வர்ணனையில் இதைக் கண்ட முன்னாள் வீரர் கவாஸ்கர் கடுமையாக விமரிசனம் செய்தார். அவர் கூறியதாவது: இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்குக் காரணம், பாதுகாவலர்கள் ரசிகர்கள் பக்கம் கவனம் செலுத்தாமல் ஆட்டத்தைக் கவனிப்பதுதான். இந்தியாவில் எப்போதும் இப்பிரச்னை உள்ளது. கிரிக்கெட் ஆட்டத்தை இலவசமாகப் பார்ப்பதற்காக பாதுகாவலர்கள் அங்கு இல்லை. இதுபோன்று அத்துமீறி நுழைபவர்களைத் தடுப்பதற்காகத்தான் அவர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
பாதுகாவலர்களின் பக்கம் கேமராவைத் திருப்பி, அவர்கள் ஆட்டத்தைப் பார்க்கிறார்களா அல்லது ரசிகர்களைக் கவனிக்கிறார்களா எனக் கண்காணிக்கவேண்டும். இதுபோன்று அத்துமீறி நுழையும் வீரர்களால் வீரர்களுக்கு ஆபத்து நேரலாம். இதுபோல முன்பு நடைபெற்றுள்ளது. பிறகு ஏன் இவ்வாறு அலட்சியமாக இருக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான தொடரில் இதுபோன்று 3-வது முறையாக ரசிகர் ஒருவர் அத்துமீறி மைதானத்துக்குள் நுழைந்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டிலும் மொஹலியில் நடைபெற்ற டி20 ஆட்டத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இதனையடுத்து, பிலாண்டர் – மகாராஜ் ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இவர்களின் விக்கெட்டை இந்திய பந்துவீச்சாளர்களால் எளிதில் எடுக்க முடியவில்லை. மகாராஜ் அசத்தலாக விளையாடி அரைசதம் அடித்தார். 200 ரன்களை எட்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 250 ரன்களை தென்னாப்பிரிக்கா அணி தாண்டியது.
இறுதியில் 72 ரன்கள் எடுத்த போது அஸ்வின் பந்துவீச்சில் மகாராஜ் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரபாடா 2 ரன்னில் உடனே அஸ்வின் பந்துவீச்சில் அவுட் ஆனார். தென்னாப்பிரிக்க அணி 275 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட் சாய்த்தார். உமேஷ் யாதவ் 3 விக்கெட் எடுத்தார்.
இந்திய அணியை விட தென்னாப்பிரிக்கா 326 ரன்கள் பின் தங்கியுள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ளதால் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.