சுற்றுப்பயணத்தை வெற்றியில் துவங்கியது மகிழ்ச்சியாக உள்ளது – ரோகித் சர்மா

அயர்லாந்துக்கு எதிரான முதலாவது ‘டுவென்டி–20’ போட்டியில் இந்திய அணி 76 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது என ரோகித் சர்மா ட்விட்டரில் கூறியுள்ளார்.

அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. நேற்று, டப்ளின் நகரில் முதல் போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற அயர்லாந்து அணி கேப்டன் வில்சன், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ஸ்டூவர்ட் தாம்ப்சன் வீசிய 3வது ஓவரில், 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார் தவான். பாய்டு ரான்கின் வீசிய 4வது ஓவரில், 2 பவுண்டரி விளாசினார் ரோகித். கெவின் ஓபிரையன், பீட்டர் சேஸ், ஜார்ஜ் டாக்ரெல் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்ட தவான், 27 பந்தில் அரைசதம் அடித்தார். சிமி சிங், ரான்கின் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த ரோகித், தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 160 ரன் சேர்த்த போது கெவின் ஓபிரையன் பந்தில் தவான் (74) அவுட்டானார். அடுத்து வந்த ரெய்னா (10), தோனி (11) நிலைக்கவில்லை. கேப்டன் கோஹ்லி, ‘டக்–அவுட்’ ஆனார். அபாரமாக ஆடிய ரோகித் (97) சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். இந்திய அணி, 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு, 208 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா (6) அவுட்டாகாமல் இருந்தார். அயர்லாந்து சார்பில் பீட்டர் சேஸ், 4 விக்கெட் வீழ்த்தினார்.

குல்தீப் அசத்தல்

கடின இலக்கை விரட்டிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் (1) ஏமாற்றினார். ஆன்டி பால்பிர்னீ (11), சிமி சிங் (7) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். பொறுப்பாக ஆடிய ஜேம்ஸ் ஷனான், 29 பந்தில் அரைசதமடித்தார். குல்தீப் ‘சுழலில்’ ஷனான் (60) சிக்கினார். சகால் பந்தில் கெவின் ஓபிரையன் (10), கேப்டன் வில்சன் (5) வெளியேறினர். அயர்லாந்து அணி, 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 4 விக்கெட் வீழ்த்தினார். 

100

அயர்லாந்துக்கு எதிராக களமிறங்கியதன்மூலம், 100வது சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் விளையாடிய 7வது அணி என்ற பெருமை பெற்றது இந்தியா. ஏற்கனவே பாகிஸ்தான் (128 போட்டி), நியூசிலாந்து (111), இலங்கை (108), தென் ஆப்ரிக்கா (103), ஆஸ்திரேலியா (100), இங்கிலாந்து (100) அணிகள் இம்மைல்கல்லை எட்டியிருந்தன.

160

ரோகித், தவான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 160 ரன் சேர்த்தது. இதன்மூலம் சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த இந்திய ஜோடி வரிசையில் 2வது இடம் பிடித்தது. முதலிடத்தில் ரோகித், லோகேஷ் ராகுல் (165 ரன், எதிர்: இலங்கை, 2017) உள்ளது.

முதன்முதலாய்…

இந்திய அணி, தனது முதலாவது சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியை தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக (2006, இடம்: ஜோகனஸ்பர்க்) விளையாடியது. அப்போது இந்திய ‘லெவன்’ அணியில் இடம் பெற்றிருந்த தோனி, ரெய்னா, நேற்று இந்திய அணி பங்கேற்ற 100வது ‘டுவென்டி–20’ போட்டியிலும் விளையாடினர். ஆனால் முதல் போட்டியில் விளையாடிய தமிழக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், 100வது போட்டியில் இடம் பெறவில்லை.

* பாகிஸ்தானின் அப்ரிதி, சோயிப் மாலிக், முகமது ஹபீஸ், இலங்கையின் உபுல் தரங்கா ஆகியோர் தங்கள் அணி விளையாடிய முதல் மற்றும் 100வது சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் விளையாடினர்.

 

Editor:

This website uses cookies.