பவர்பிலேயில் விட்ட விக்கெட்டுகள் தான் தோல்விக்கு காரணம் : புலம்பித்தள்ளும் ஹிட்மேன்

மும்பை – பெங்களூரு இடையேயான போட்டியில், மும்பை அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் தொடரில் 31 வது லீக் ஆட்டத்தில் மும்பை அணியும் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி  பீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டான் டி காக் – மனன் வோரா ஆகியோர் களம் இறங்கினர். முதலில் நிதானத்துடன் ஆட்டத்தை தொடங்கிய இருவரும் பின் அடித்து ஆட முற்பட்டனர். 7 ரன்கள் எடுத்த நிலையில் மெக்லெனக்கான் வீசிய பந்தில் டி காக் ஆட்டமிழந்தார். வோரா 31 பந்தில் 45 ரன்கள் எடுத்த நிலையில் மார்கண்டே பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.

பின்னர் ஜோடி சேர்ந்த கோலி – மெக்குல்லம் ஜோடி பொறுப்புணர்ந்து நிதானமாகவும், அதிரடியாகவும் ஆடத்தொடங்கினர். ரன்கள் மல மலவென ஏறத்தொடங்கிய நேரத்தில், மெக்குல்லம் 25 பந்தில் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன்அவுட் என்ற முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். 18 வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பெங்களூருவை திணறடித்தார். கடைசி ஓவரில் கிராண்ட்ஹோம் 3 சிக்சர்களை விளாச நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு 167 ரன்கள் எடுத்தது.

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் களம் இறங்கினர். ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்து ஆடம்பமே அதிர்ச்சி அளித்தார் இஷான். அணியின் கேப்டன் ரோ ஹிட் சர்மாவும் ரன் எடுக்காத நிலையில் உமேஷ் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டுமினி ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற மும்பை அணி தள்ளாடியது. ஹர்திக் மற்றும் ருனால் பாண்டியா பொறுப்புணர்ந்து ஆடத்தொடங்கியதும் மும்பை அணி வெற்றி இலக்கை துரத்தியது.

கடைசி சில ஓவர்களை சிறப்பாக அமைத்து மும்பை இந்தியன்ஸ் வெற்றியை தடுத்து நிறுத்தியது பெங்களூரு. 20 ஓவர்கள் நிறைவுற்ற நிலையில் 153 ரன்கள் மட்டுமே எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது மும்பை அணி.

Editor:

This website uses cookies.