ரிஷப் பண்டை எதற்கு நான்காவதாக ஆட வைத்தீர்கள் என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு தனது நகைச்சுவையான பதிலால் கிண்டல் அடித்துள்ளர் ரோஹித் சர்மா.
உலக கோப்பை தொடரில் 38 வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த உலக கோப்பையில் தோல்வியை தழுவாத அணியாக இருந்த இந்தியாவை இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இங்கிலாந்து அணிக்கு சிறப்பான துவக்கம் அமைந்தது. அதேபோல் இந்தியாவின் சுழல் பந்துவீச்சாளர்கள் சஹால், குலதீப் தங்கள் 20 ஓவர்களில் 168 ரன்கள் கொடுத்தனர். இவை இரண்டுமே இந்தியாவின் தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது என்னவெனில், கடந்த இரண்டு போட்டிகளாகவே நான்காவது இடத்தில் விஜய்சங்கர் தடுமாறி வந்ததால், அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் கொண்டு வரவேண்டும் என விமர்சனங்களும் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்னர், விஜய்சங்கர் நன்கு ஆடக்கூடியவர். அவரை நாங்கள் சரியாக பயன்படுத்தவில்லை என விராத் கோலி ஆதரவு தந்ததால், இங்கிலாந்துக்கு எதிராகவும் விஜய் சங்கர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் விஜய் சங்கர் வெளியில் அமர்த்தப்பட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் கொண்டுவரப்பட்டது. தன்னை நிரூபிக்கும் வண்ணம் ரிஷப் பண்ட் களமிறங்கி ஆடினார். முதல் உலகக் கோப்பை போட்டி என்பதால் அவரிடம் பதற்றம் நிறைய காணப்பட்டது. 28 பந்துகளில் 32 ரன்கள் அடித்திருந்த அவர் எளிதில் அரைசதம் பூர்த்தி செய்வார் என்று இருந்த நிலையில் துரதிஸ்டவசமாக சிக்ஸ் அடிக்க முயற்சி செய்து வோக்ஸ் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இப்போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்த பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா. அப்போது நிருபர் ஒருவர் விஜய் சங்கருக்கு பதிலாக ரிஷப் பண்ட் கொண்டுவந்தீர்கள். அதேநேரம் ஹர்திக் பாண்டியா நான்காவது களமிறங்குவதாக இருந்தது. ஆனால், பண்ட்டை சற்று முன்னே அனுப்பியதற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா, “நீங்கள் தான் ரிஷப் எங்கே? எங்கே? என்று கேட்டீர்கள். அவர் நான்காவது இடத்தில் தான் இருக்கிறார் என காற்றுவதற்காக தான்” என தோனியின் நேர்த்தியான பாணியில் பத்திரிகையாளர்களுக்கு பதிலளித்தார்.