இந்தியா பார்த்த ஒரு சிறந்த கேப்டன் தோனி என ரோகித் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பிறகு எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. இந்திய அணி தொடர்ச்சியாக பல்வேறு தொடர்களில் விளையாடி வந்தாலும், எந்த தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. இந்த ஆண்டிற்கான வீரர்களின் ஒப்பந்தத்திலும் தோனி பெயர் இல்லை. அதனால், தோனி இனிமேல் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வரும் தோனி, மார்ச்சில் தொடங்கும் ஐபிஎல்லில் பங்கேற்கவுள்ளார்.
ஐபிஎல்லில் தோனியின் பங்களிப்பை வைத்து அவரின் எதிர்காலம் தீர்மானிக்கப்படலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தோனி அணியில் இல்லாததால், அவரை தினம் தினம் ரசிகர்களும் இந்திய அணி வீரர்களும் மிஸ் செய்தே வருகின்றனர். சமீபத்தில் வீடியோ வெளியிட்ட சாஹல் தோனியின் இருக்கை குறித்து நெகிழ்ச்சியாக பேசி தோனியை மிஸ் செய்வதாக தெரிவித்தார்.
நியூசிலாந்திற்கு எதிரான டி20 போட்டியில் ‘மிஸ்யூ தோனி’ என ரசிகர்கள் பதாகைகள் தாங்கி நின்றனர். இந்நிலையில் தோனி குறித்து ஹிட்மேன் ரோகித் சர்மா பேசியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய ரோகித், “தோனி ஒரு கூல் கேப்டன் என்பது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தெரியும். அந்த குணம்தான் மைதானத்தில் சரியான முடிவுகளை எடுக்க வைக்கிறது.
ஐபிஎல் உள்ளிட்ட பல கோப்பைகளை வென்ற ஒரு வெற்றிகரமான கேப்டன் தோனி. ஆட்டத்தின் நெருக்கடியான நேரத்திலும் அமைதியாக இருப்பதே அதற்கு காரணம். பல இளம் வீரர்கள் அழுத்தத்தில் இருக்கும்போது அவர்களை தோனி சரியாக கையாள்வார். அவர்களின் கழுத்தில் கையைப் போட்டுக்கொண்டு சகஜமாக பேசுவார். ஒரு சீனியர் அப்படி பேசும்போது இளம் வீரர்களுக்கு தானாகவே உத்வேகம் வரும். அதனை தோனி செய்வார். இந்தியா பார்த்த ஒரு சிறந்த கேப்டன் தோனி” என புகழாரம் சூட்டியுள்ளார்.