விராட் கோலி கூட செய்ததில்லை… தோனிக்கு பிறகு இந்த சாதனை படைத்த ஒரே இந்திய கேப்டன் ரோகித் சர்மா!

ஆர்சிபி அணிக்கெதிரான போட்டியில் கேப்டனாக விளையாடும் ரோகித் சர்மா, டி20 கேப்டன்கள் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் ஐந்தாவது லீக் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. இப்போர்ட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ரோகித் சர்மா டி20 கேப்டனாக விளையாடும் 200ஆவது போட்டி இதுவாகும். 2013 ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக விளையாடி வருகிறார் ரோகித் சர்மா. இவர் தலைமையில் 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றிருக்கிறது. ஒருமுறை டி20 சாம்பியன்ஸ் லீக் கோப்பையும் 2013ஆம் ஆண்டு வென்றுள்ளது.

இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 143 ஐபிஎல் போட்டிகள் மற்றும் ஐந்து சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் ரோகித் சர்மா கேப்டனாக இருந்திருக்கிறார். 51 சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா இருந்திருக்கிறார்.

மொத்தமாக 199 டி20 போட்டிகளில் கேப்டன் பொறுப்பேற்று விளையாடியுள்ள ரோகித் சர்மாவிற்கு, ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டி கேப்டனாக விளையாடும் 200ஆவது போட்டியாகும். 200+ டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ள மூன்றாவது வீரர் மற்றும் இரண்டாவது இந்திய வீரர் ஆவார்.

ரோகித் சர்மா-விற்கு முன்னர், மகேந்திர சிங் தோனி 307 டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு முதல் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் டேரன் சமி 208 டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர்.

ஐபிஎல் போட்டிகளில் அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர்கள் பட்டியலில், சிஎஸ்கே மற்றும் ரைஷிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆகிய அணிகளுக்கு கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி மொத்தம் 211 ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக, ரோகித் சர்மா 143 போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் விளையாடி, இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக, 150+ டி20 போட்டிகளில் கேப்டன் பொறுப்பேற்று விளையாடியுள்ளா கேப்டன்களுக்கு மத்தியில், ரோகித் சர்மா அதிக வெற்றி சதவீதத்தை வைத்திருக்கிறார். ரோகித் சர்மா 61.31 சதவீதம் வெற்றிகளை கேப்டனாக பெற்றுத்தந்திருக்கிறார்.

Mohamed:

This website uses cookies.