‘நான்தான் அடுத்த தோனியா?’ ரெய்னா சொன்னதற்கு ஷாக் பதில் கொடுத்த ரோகித்!

‘நான்தான் அடுத்த தோனியா?’ ரெய்னா சொன்னதற்கு ஷாக் பதில் கொடுத்த ரோகித்!

ரோகித் சர்மா தான் அடுத்த தோனி என சுரேஷ் ரெய்னா கமெண்ட் செய்ததற்கு பதிலளித்துள்ளார் ரோஹித் சர்மா.

இந்தியாவில் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதம் இறுதியில் இருந்து தற்போது வரை எவ்வித கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் துவங்க இருக்கின்றன. அதற்கு அனைத்து ஐபிஎல் அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் முன்பாக எவ்வித பயிற்சிகளிலும் வீரர்கள் ஈடுபட முடியாததால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த காலகட்டத்தில் வீரர்கள் ரசிகர்களுடன் வினவுவதற்கு சமூக வலைதளங்களை பயன்படுத்தி நேரலையில் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தனர்.

அப்படி ஒரு நேரலையில் பங்கேற்ற இந்திய வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான சுரேஷ் ரெய்னா, சமீபத்திய நேரலையில் இந்திய அணியின் அடுத்த தோனி என நான் ரோகித் சர்மாவை கூறுவேன் என பேட்டி அளித்தார்.

மேலும் பேசிய சுரேஷ் ரெய்னா, “ரோகித் சர்மாவை நான் பார்த்திருக்கிறேன். அவர் மிகவும் அமைதியானவர். மற்றவர்களிடம் கேட்டு எடுத்துக் கொள்ளக் கூடியவர். அதேபோல வீரர்களுக்கு ஊக்கம் அளித்து கொண்டே இருப்பார். இவற்றிற்கும் மேலாக அணியை முன்னின்று வழி நடத்திச் செல்வார். இது போன்ற அனைத்து குணங்களும் தோனியிடம் நான் பார்த்திருக்கிறேன். அதை வைத்துதான் ரோஹித் சர்மாவை அடுத்த தோனி என நான் குறிப்பிடுகிறேன்.” என பேசினார்.

ரெய்னா அளித்த இத்தகைய பெரிய ஒப்பீட்டை கேட்டறிந்த ரோகித்சர்மா அதற்கு மிகவும் தாழ்மையுடன் பதிலளித்துள்ளார். ட்விட்டர் பக்கத்தில் அவர் கலந்துகொண்ட நேரலையில் இதற்கு பதில் அளித்திருக்கிறார்.

இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில், “ஆம், நான் ரெய்னா கூறிய கமெண்ட்டை கேட்டேன். எம்எஸ் தோனி எப்போதும் ஒருவர் மட்டுமே. அவரைப் போல இன்னொருவர் இருக்க இயலாது. இதுபோன்ற ஒப்பீடுகள் செய்வதை நான் சரியல்ல என்று நினைக்கிறேன். ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனியாக பலம் மற்றும் பலவீனங்கள் இருக்கும். அதனைப்பொறுத்து அவர்கள் மாறுபடுகிறார்கள்.” என்றார்.

சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல வருடங்களாக தோனி தலைமையில் ஆடிவருகிறார். அதேபோல 2018ம் ஆண்டு நிதாஷ் டிராபி மற்றும் ஆசிய கோப்பை ஆகிய இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியை வழிநடத்திச் சென்ற ரோகித் சர்மாவின் கீழ் ரெய்னா ஆடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.