இந்திய அணிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா !!

இந்திய அணிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தடுமாறி வரும் நிலையில், அமைதி காக்குமாறு ரசிகர்களுக்கு ரோகித் சர்மா வலியுறுத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. இந்நிலையில் 2 வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால், டாஸ் போடப்படாமல் முதல் நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது.

2வது நாள் இங்கிலாந்து அணி, டாஸ் வென்று முதலில் பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில், 107 ரன்களுக்கு சுருண்டது. லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணியின் குறைந்த ஸ்கோர் இது. இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளையும், வோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பிராட், சாம் குர்ரன் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதனையடுத்து, தனது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் எடுத்தது. வோக்ஸ் அபாரமாக விளையாடி சதமடித்தார். அதேபோல், பெர்ஸ்டோவ் 93 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து, 286 ரன்கள் பின் தங்கிய நிலையில் விளையாடி வரும் இந்திய அணி, மீண்டும் விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்து தடுமாறியது. இந்திய அணி 125 ரன்களுக்கு 8 விக்கெட்கள் இழந்து தடுமாறி வருகிறது.

முன்னதாக, முதல் இன்னிங்சில் இந்திய வீரர்கள் யாரும் ரன் அடிக்காமல் அவுட் ஆனதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதனையடுத்து, இந்திய அணி தடுமாறி வரும் நிலையில், அமைதி காக்குமாறு ரசிகர்களுக்கு ரோகித் சர்மா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ரோகித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த வீரர்கள் தான் இந்திய அணியை நம்பர்.1 இடத்திற்கு கொண்டு வந்தவர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் அவர்களுக்கு நம்முடைய ஆதரவு வேண்டும். இது நம்முடைய அணி” என்று கூறியுள்ளார்.

Mohamed:

This website uses cookies.