நான் சிறப்பான வகையில் விளையாடாமல் இருந்திருந்தால், மீடியாக்கள் மிகவும் மோசமாக எழுதியிருக்கும் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட்ட ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த அவர், ராஞ்சியில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்டில இரட்டை சதம் விளாசினார். நான்கு இன்னிங்சில் 529 ரன்கள் குவித்துள்ள ரோகித் சர்மா, நான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் மீடியாக்கள் மிகவும் மோசமான வகையில் எழுதியிருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘நான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் என்னைப் பற்றி அதிகமாக எழுதியிருப்பார்கள். பத்திரிகைகள் முழுவதும் நான் பெற்ற வாய்ப்புகளை பற்றிதான் எழுதின. நான் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வேன் என்பது எனக்குத் தெரியும். இல்லையெனில் மீடியாக்கள் எனக்கு எதிராக எழுதியிருக்கும். தற்போது எல்லோரும் என்னைப் பற்றி நல்ல விஷயங்களை எழுதுவார்கள்.
தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடுவது எனக்கு சிறப்பான வாய்ப்பு. எனக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்கனவே இதுகுறித்து பேச்சு நடந்து கொண்டிருந்தது என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆக, மனதளவில் நான் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க தயாராகிவிட்டேன். இந்த வாய்ப்பு எந்த நேரத்திலும் என்னைத் தேடிவரும் என்பது எனக்குத் தெரியும்’’
எனினும் 5-ஆவது அல்லது 6-ஆவது இடத்தில் விளையாடுவதைவிட தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது சவாலாக உள்ளது. ஏனென்றால் 30,40-ஆவது ஓவர்களில் களமிறங்குவது சற்று எளிது. ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்தில் பந்து ஸ்விங் ஆகும் போது விளையாடுவது மிகவும் கடினம். அந்தச் சமயத்தில் எந்தப் பந்தை விடுவது எந்தப் பந்தை அடிப்பது என்று கணிப்பது சற்று சவாலாக இருக்கும். இந்தப் போட்டியில் எனக்கு அப்படி ஒரு சவாலான நிலைதான் இருந்தது. இதனால் தான் தொடக்கத்தில் சற்று பொறுமையாக விளையாட ஆரம்பித்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.