ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னுக்கு சரியான பதிலடி கொடுத்த ரோஹித் சர்மா !!

ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னுக்கு சரியான பதிலடி கொடுத்த ரோஹித் சர்மா

தன்னை வம்புக்கு இழுத்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னிற்கு ரொஹித் சர்மா சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்துவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸை 443 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் புஜாரா சதமடிக்க, மயன்க், கோலி, ரோஹித் ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஹனுமா விஹாரியை தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களுமே நல்ல பங்களிப்பை அளித்ததால் 443 ரன்களை குவித்தது இந்திய அணி. 7வது விக்கெட்டாக ஜடேஜாவை இழந்ததும் இந்திய அணி டிக்ளேர் செய்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை இரண்டாம் நாள் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 6 ஓவர்கள் பேட்டிங் செய்து விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில், ரோஹித் சர்மா வழக்கத்திற்கு மாறாக மிகவும் நிதானமாக பொறுமையை கையாண்டு பேட்டிங் செய்தார். வழக்கமாக தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து எளிதாக விக்கெட்டை இழந்துவிடும் ரோஹித் சர்மா, இன்று தூக்கியே அடிக்கவில்லை. அப்படி தூக்கி அடித்தாலும் சீரான உயரத்தில் தூக்கி பவுண்டரி தான் அடித்தாரே தவிர சிக்ஸருக்கு முயற்சிக்கவில்லை. தனது தவறை உணர்ந்து அதை திருத்திக்கொண்டு ஆடினார் ரோஹித்.

ஆஸ்திரேலிய அணியும் வழக்கம்போல ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்திவிடலாம் என்ற ஆசையில் நாதன் லயனை தொடர்ந்து பந்து வீச வைத்தது. ஆனால் சற்றும் அசராத ரோஹித் சர்மா, பொறுமையை கைவிடாமல் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். அதனால் ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்த முடியாத விரக்தியில் ஸ்லெட்ஜிங் என்ற ஆயுதத்தை கையில் எடுத்தார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்.

விக்கெட் கீப்பிங் செய்துகொண்டிருந்த டிம் பெய்ன், ரோஹித்திடம், நீங்கள் மட்டும் இந்த மைதானத்தில் சிக்ஸர் அடித்துவிட்டால் பின்னர் நான் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகராகி விடுவேன் என்று ரோஹித்தை சீண்டும் விதத்தில் கூற, சுற்றி நின்ற உஸ்மான் கவாஜா, ஃபின்ச் ஆகியோர் நக்கலாக சிரித்தனர். ஆனால் தன்னை அவர்கள் உசுப்பேற்றுவதை உணர்ந்த ரோஹித் சர்மா, அவசரப்படாமல் மீண்டும் பொறுமையை கடைபிடித்து ஆடினார்.

இந்நிலையில் தன்னை சீண்டிய டிம் பெய்னிற்கு அவரது பாஷையிலேயே பதிலளித்துள்ள ரோஹித் சர்மா, டிம் பெய்ன் இந்த போட்டியில் சதம் அடித்தால் அவரை மும்பை அணியில் எடுத்து கொள்கிறேன் என்று கூறி டிம் பெய்னை நோஸ் கட் செய்துள்ளார்.

இது குறித்து பேசிய ரோஹித் சம்ரா, டிம் பெய்ன் கூறியது எனக்கு நன்றாக கேட்டது, இருந்த போதிலும் நான் அதில் கவனம் செலுத்தாமல் பேட்டிங்கில் மட்டுமே எனது முழு கவனத்தையும் செலுத்தினேன். டிம் பெய்ன்னும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர் என்று நினைக்கிறேன். இந்த போட்டியில் அவர் சதம் அடித்து விட்டால் மும்பை அணியின் உரிமையாளர்களிடம் பேசி டிம் பெய்னை மும்பை இந்தியன்ஸ் அணியில் எடுத்து கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்

 

Mohamed:

This website uses cookies.