டிவில்லியர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடுவாரா..? பெங்களூர் அணி விளக்கம்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ் ஐ.பி.எல் தொடருக்கான பெங்களூர் அணியில் தொடர்ந்து விளையாடுவார் என்று பெங்களூர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதையை கிரிக்கெட் உலகின் ஜாம்பவானுமான ஏ.பி.டிவில்லியர்ஸ் உலகம் முழுவதும் தனக்கென ஒரு பெரும் ரசிகர் படையை பெற்றுள்ளவர். இவரின் திறமைக்கும், அதிரடி ஆட்டத்திற்கும் இந்தியாவில் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளது நாம் அறிந்ததே.
ஒட்டுமொத்த கிரிக்கெட் அணிகளும் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக தீவிரமாக தயாராகி வரும் நிலையில், தென் ஆப்ரிக்கா அணிக்கு பெரும் இழப்பாக டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நேற்று தனது ஓய்வு முடிவை திடீரென அறிவித்தார்.
டிவில்லியர்ஸின் இந்த திடீர் முடிவு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, மேலும் டிவில்லியர்ஸ் வெளிநாடுகளில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது குறித்து எந்த திட்டமும் இல்லை என்று தெரிவித்திருந்ததால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிலும் டிவில்லியர்ஸ் விளையாட வாய்ப்பு இல்லை என்று தகவல் பரவியால் பெங்களூர் ரசிகர்கள் வேதனையடைந்திருந்தனர்.
இந்நிலையில் இது குறித்து பெங்களூர் அணியின் ரசிகர் ஒருவர் டிவில்லியர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடுவாரா இல்லையா..? என்று ட்விட்டர் மூலம் பெங்களூர் அணியிடம் கேள்வி எழுப்பினார், அதற்கு பெங்களூர் அணி அவர் நிச்சயம் பெங்களூர் அணியில் தொடர்வார் என்று பதிலளித்துள்ளது.