ஐபிஎல் தொடருக்காக புத்தம்புதிய ஜெர்சியை வெளியிட்ட ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதிலாவது ஜொலிக்குமா
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.இதுவரை 12 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் செப்டம்பர் 19ம் தேதி துவங்க உள்ளது.கொரோனாவின் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஐ.பி.எல் தொடரை நடத்த முடியாத சூழல் நிலவுவதால் யுனைடெட் அராப் எமிரேட்ஸில் இந்த வருடத்திற்கான தொடர் நடக்க உள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல் தொடர் துவங்கும் முன்பே ஒவ்வொரு அணி வீரரும் ஐந்து முறை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் துபாய் செல்வதற்கு முன்பு இந்தியாவிலேயே ஒவ்வொரு வீரரும் மூன்று முறை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன்பின்னே துபாய் அழைத்து செல்லப்பட்டனர்.
இப்படி பல ஏற்பாடுகள் படு தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் வருடா வருடம் தங்களது ஜெர்சியை மட்டும் மாற்றும் வேலையை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி செய்து கொண்டிருக்கிறது. முதன்முதலாக சொந்த மைதானத்தில் நடக்கும் ஒரு போட்டிக்கு ஒருவர் ஜெர்சியையும் வெளி ஊர் மைதானத்தில் நடக்கும் போட்டிகளுக்கு ஒரு ஜெர்சியையும் அறிமுகப்படுத்தியது இந்த அணிதான்.
அப்போதில் இருந்து தற்போது வரை வருடாவருடம் புதிது புதிதாக டிசைன் டிசைனாக ஜெர்சியை தயார் செய்து வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் அந்த கருப்பு சிவப்பு எப்போதும் மாறுவதில்லை. இந்நிலையில் இந்த வருடத்திற்கும் பட்டி டிங்கரிங் பார்த்து புதிய ஜெர்சியை வெளியிட்டுள்ளது ராயல் சாலஞ்சர்ஸ் அணி. மேலும் புதிய ஸ்பான்சர்கள் அந்த அணிக்கு கிடைத்துள்ளனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் விராட் கோலி, பார்த்தீவ் பட்டேல், டிவில்லியர்ஸ், உமேஷ் யாதவ், சாகல் போன்ற வீரர்களை வைத்து வெளியிட்டுள்ளது ராயல் சாலஞ்சர்ஸ் அணி
இந்த வருடம் அந்த அணி வித்தியாசமாக இருக்கும் என்று தெரிகிறது. அணியின் மொத்த கட்டமைப்பும் மாற்றப்பட்டுள்ளது
மொயின் அலி, கிறிஸ் மோரிஸ், ஆரோன் பின்ச், நவதீப் சைனி போன்ற புதிய வீரர்களை வாங்கி வைத்திருக்கிறார்கள். அணியின் நிர்வாகம் மாற்றப்பட்டிருக்கிறது இந்த முறையாவது பெயர் சொல்லும் அளவிற்காவது செயல்படும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.