மீண்டும் ஒருமுறை ஆர்சிபி அணியை தலைதூக்க வைத்துள்ளனர் மேக்ஸ்வெல் மற்றும் கேப்டன் டு பிளசிஸ். அனுஜ் ராவத் சிறப்பாக பினிஷ் செய்து கொடுக்க ஆர்சிபி அணி 172 ரன்கள் இலக்கை ராஜஸ்தான் அணிக்கு முன்வைத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதி வரும் லீக் போட்டி சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்று வருகிறது இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார் டு பிளசிஸ்.
ஆர்சிபி அணிக்கு ஓப்பனிங் இறங்கிய விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் ஜோடி பவர்-பிளே ஓவர்களில் விக்கெட் இழக்காமல் நிதானமாக விளையாடி முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் சேர்த்தனர். விராட் கோலி 18 ரன்கள் அடித்திருந்தபோது, கேஎம் ஆசிப் பந்தில் தவறான ஷாட் விளையாடி ஆட்டம் இழந்தார்.
அடுத்து உள்ளே வந்த கிளென் மேக்ஸ்வெல் கடந்த போட்டியில் இருந்த ஃபார்மை அப்படியே தொடர்ந்தார். அதிரடியாக விளையாடி வந்த டு பிளசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தது. அரைசதம் அடித்திருந்த டு பிளசிஸ் 44 பந்துகளில் 55 ரன்கள் அடித்து இருந்தபோது, கேஎம் ஆசிப் பந்தில் ஆட்டம் இழந்தார்.
அதன்பிறகு ஆட்டத்தை அதிரடியாக எடுத்துச் சென்ற மேக்ஸ்வெல் அரைசதம் அடித்தார். உள்ளே வந்த மஹிப்பால் லோமரர் 1 ரன், தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். நன்றாக ஆடிவந்த மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 54 ரன்கள் அடித்து, சந்திப் சர்மாவின் வந்து வீட்டில் கிளீன் போல்ட் ஆனார்.
118/1 என இருந்த ஆர்சிபி 120/4 என மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. கடைசி 2 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்ததால் 150 ரன்கள் எட்டுவதே கடினம் என கருதப்பட்டது.
கடைசியில் உள்ளே வந்து இரண்டு சிக்ஸர்கள் மூன்று பவுண்டரிகள் அடித்து மிகச்சிறப்பாக பினிஷிங் செய்து கொடுத்த அனுஜ் ராவத் 11 பந்துகளில் 29 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டம் விளக்காமல் இருந்தார். இதனால் ஆர்சிபி 170 ரன்களை கடந்தது. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் அடித்தது.
இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது எளிதல்ல, 160 ரன்கள் இலக்கை எட்டுவதே சற்று கடினமாக இருக்கும் என்று பிட்ச் விவரங்கள் கூறுகின்றன. இப்படியிருக்க, 172 ரன்கள் இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!.