தனது ரன் வேட்டையை விஜய் ஹசாரே பைனலிலும் தொடர்ந்தார் ருத்துராஜ் கெய்க்வாட். 108 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
உள்ளூர் 50 ஓவர் போட்டியான விஜய் ஹசாரே டிராபி இறுதிப் போட்டியில் மகாராஷ்டிரா மற்றும் சௌராஷ்டிரா ஆகிய இரு அணிகள் பல பரிட்சை மேற்கொண்டு வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணியின் கேப்டன் உனட்கட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இப்போட்டியில் மகாராஷ்டிரா அணிக்கு கேப்டன் ருத்ராஜ் மற்றும் பிரணவ் ஷா இருவரும் ஓபனிங் செய்தனர். வழக்கமாக ராகுல் திரிப்பாதி ஓபனிங் செய்வார். அவர் ஒருநாள் போட்டிக்காக பங்களாதேஷ் சென்றுவிட்டார்.
குவாட்டர் பைனலில் 220 ரன்கள் மற்றும் செமி பைனலில் 160+ ரன்கள் குவித்த அதே பார்மை இப்பொடியிலும் எடுத்துச் சென்றார். இவர் ஒரு பக்கம் அடித்து விளையாடினால், மறுமுனையில் வந்த வீரர்கள் நிலைத்து ஆடவில்லை.
ஓபனர் பிரணவ் 4 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்துவந்த பச்சவ் வெறும் 21 ரன்களுக்கு வெளியேறினார்.
நல்ல பார்மில் இருந்த பாவ்னே இம்முறை வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க மகாராஷ்ட்ரா அணிக்கு சற்று அழுத்தம் ஏற்பட்டது. ஆனால் கேப்டன் ருத்ராஜ் இதைப் பற்றியும் யோசிக்காமல் மறுமுனையில் நின்று நன்றாக விளையாடு அரை சதம் கடந்தார்.
மிடில் ஓவர்களில் அசிம் காசி சிறிது பார்ட்னர்ஷிப் அமைக்க உதவினார். ஆனால் அவரும் நீடிக்கவில்லை. 37(33) ரன்கள் அடித்து அவுட்டானார். இதில் 3 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கும்.
பைனலிலும் சதம் அடித்து அசத்திய கேப்டன் நான்கு சிக்ஸர்கள் ஏழு பவுண்டர்கள் உட்பட 108(131) ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த நாவுசித் ஷேக் 31(23) அடித்து இறுதிவரை ஆட்டமிழகாமல் இருந்தார் ஆனால் மற்ற வீரர்கள் ஓரிரு ரன்களுக்கு அவுட் ஆகினர்.
சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வந்த மகாராஷ்டிரா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 248 ரன்கள் அடித்தது.
ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ந்து தன்னை நிரூபித்துக் கொண்டு வரும் ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு சோசியல் மீடியாவில் மீண்டும் பாராட்டு மழைகள் பொழிந்து வருகின்றன.
சௌராஷ்டிரா அணிக்கு 249 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.