இரண்டு சீனியர் வீரர்கள் நீக்கம்… வெங்கடேஷ் ஐயர், ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு இந்திய அணியில் இடம்; முக்கிய தகவல் வெளியாகியுள்ளது !!

தென் ஆப்ரிக்கா அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் ஐயருக்கு ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்த சில தினங்களில் தென் ஆப்ரிக்காவிற்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இதில் முதலில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் சர்மா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முகமது சிராஜ் போன்ற இளம் வீரர்களுக்கு தென் ஆப்ரிக்கா தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி தற்போது நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான விஜய ஹசாரே தொடர் நிறைவடைந்த பிறகு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்கள் சிலருக்கு தென் ஆப்ரிக்கா தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கலாம் என தெரிகிறது.

இந்தநிலையில், தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி தென் ஆப்ரிக்கா அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் ஐயருக்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என தெரிகிறது.

விஜய் ஹசாரே தொடரில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் ருத்துராஜ் கெய்க்வாட் இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டியிலும் சதம் அடித்து 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். எனவே சீனியர் வீரரான ஷிகர் தவானை ஓரங்கட்டிவிட்டு அவருக்கு பதிலாக ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் கொடுக்கப்படும் என தெரிகிறது.

அதே போல் வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக பேட்டிங் செய்வதோடு பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதால், ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக வெங்கடேஷ் ஐயருக்கு தென் ஆப்ரிக்கா தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என தெரிகிறது.

இது குறித்து பிசிசிஐ., நிர்வாகி ஒருவர் பேசுகையில், “வெங்கடேஷ் ஐயர் தென் ஆப்ரிக்கா செல்வது உறுதி. வெங்கடேஷ் ஐயரால் 9 முதல் 10 ஓவர்கள் வீசி முடிகிறது. ஹர்திக் பாண்டியா இன்னும் பந்துவீச முடியாமல் தவித்து வருவதால் வெங்கடேஷ் ஐயருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களுக்கு முன்னதாக வெங்கடேஷ் ஐயருக்கு போதிய வாய்ப்பு கொடுக்கும் திட்டம் உள்ளது” என தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.