ஒரே தொடரில் நான்கு சதம்… வரலாறு படைத்த ருத்துராஜ் கெய்க்வாட் !!

உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் ருத்துராஜ் கெய்க்வாட் நான்கு சதம் அடித்து அசத்தியுள்ளார்.

ஆண்டுதோறும் நடைபெறும் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடர் கடந்த 8ம் தேதி துவங்கியது. இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் இன்றைய போட்டியில் சண்டிகர் அணியும், மகாராஷ்டிரா அணியும் மோதின.

ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சண்டிகர் அணிக்கு மனன் வோஹ்ரா 141 ரன்களும், அர்ஸ்லன் கான் 87 ரன்களும், அன்கித் கவுசிக் 56 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த சண்டிகர் அணி 309 ரன்கள் குவித்தது.

மகாராஷ்டிரா அணி சார்பில் அதிகபட்சமாக பிசி சேதே தாதே என்னும் வீரர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய மகாராஷ்டிரா அணிக்கு அந்த அணியின் கேப்டனும், துவக்க வீரருமான ருத்துராஜ் கெய்க்வாட் 132 பந்துகளில் 6 சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரிகளுடன் 168 ரன்கள் குவித்தார். இதுவரை விளையாடியுள்ள நான்கு போட்டிகளில் மூன்று போட்டியில் சதம் அடித்திருந்த ருத்துராஜ் கெய்க்வாட், இன்றைய போட்டியிலும் சதம் அடித்திருப்பதன் மூலம், விஜய் ஹசாரே தொடரில் (ஒரே தொடரில்) 4 சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மிடில் ஆர்டர் வீரர்கள் சொதப்பினாலும், வெற்றிக்கு தேவையான பாதி ரன்களை ருத்துராஜ் கெய்க்வாட்டே எடுத்து கொடுத்துவிட்டதாலும், 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அஜிம் காஜி என்னும் வீரர் ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் எடுத்து கொடுத்ததாலும், 48.5 வது ஓவரிலேயே இலக்கை எட்டிய மகாராஷ்டிரா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Mohamed:

This website uses cookies.