உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரில் ருத்துராஜ் கெய்க்வாட் தொடர்சியாக மூன்று சதங்கள் அடித்து அசத்தியுள்ளார்.
ஆண்டுதோறும் நடைபெறும் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடர் கடந்த 8ம் தேதி துவங்கியது. இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் இன்றைய போட்டியில் கேரளா அணியும், மஹராஷ்டிரா அணியும் மோதி வருகின்றன.
ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மஹராஷ்டிரா அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட் 129 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 124 ரன்கள் குவித்து மாஸ் காட்டினார். இந்த தொடரில் விளையாடிய கடைசி இரண்டு போட்டியிலும் சதம் அடித்திருந்த ருத்துராஜ் கெய்க்வாட், தற்போது இன்றைய போட்டியில் சதம் அடித்து தொடர்சியாக மூன்றாவது சதத்தை பதிவு செய்துள்ளார். விஜய் ஹசாரே தொடரை அடிப்படையாக வைத்தே தென் ஆப்ரிக்கா அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்பதால், ருத்துராஜ் கெய்க்வாட் இந்திய ஒருநாள் அணியில் விரைவில் கால் பதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ருத்துராஜ் கெய்க்வாட் 124 ரன்களும், மிடில் ஆர்டரில் களமிறங்கிய திரிபாதி 99 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த மஹாராஷ்டிரா அணி 291 ரன்கள் குவித்தது.
கேரளா அணி சார்பில் அதிகபட்சமாக நிதீஷ் என்னும் வீரர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதே போல் பாசில் தம்பி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.