சச்சின் சாதனை தகர்ப்பு :
டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 21வது சதம் அடித்த வீரர்களில், இந்தியாவின் சச்சினை (110 இன்னிங்ஸ்) முந்தி, நான்காவது இடம் பிடித்தார் கோஹ்லி (109 இன்னிங்ஸ்). முதல் மூன்று இடங்களில் பிராட்மேன் (56, ஆஸி.,), கவாஸ்கர் (98, இந்தியா), ஸ்மித் (105, ஆஸி.,) உள்ளனர்.
முதல் வீரர் :
செஞ்சூரியன் மைதானத்தில் சதம் அடித்த, அன்னிய அணியின் முதல் வீரர் மற்றும் கேப்டன் ஆனார் கோஹ்லி. இதற்கு முன் இந்திய அணியின் தோனி 90 ரன்கள் (2010) எடுத்ததே அதிகம்.
சதம் அடித்த இரண்டாவது கேப்டன் :
நேற்று 153 ரன் எடுத்த கோஹ்லி, தென் ஆப்ரிக்க மண்ணில் சதம் அடித்த இந்திய அணியின் இரண்டாவது கேப்டன் ஆனார். இதற்கு முன் சச்சின், 1997ல், கேப்டவுன் டெஸ்டில் 169 ரன்கள் எடுத்திருந்தார்.
* தென் ஆப்ரிக்க மண்ணில் அதிக சதம் அடித்த ஆசிய வீரர்களில் சச்சினுக்கு (5) அடுத்து, இரண்டாவது இடத்தை அசார் மகமூது (2, பாக்.,), சமரவீராவுடன் (2, இலங்கை) பகிர்ந்து கொண்டார் கோஹ்லி (2).
* தற்போது விளையாடி வரும் வீரர்களில் அதிக டெஸ்ட் சதம் அடித்தவர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார் கோஹ்லி (21). முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்மித் (23) உள்ளார். வில்லியம்சன் (17, நியூசி.,), ஜோ ரூட் (13, இங்கிலாந்து) அடுத்த இடங்களில் உள்ளனர்.
8 முறை 150+ எடுத்த கேப்டன்
டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்து அதிக முறை 150 ரன்னுக்கும் மேல் எடுத்த வீரர் வரிசையில், ‘ஜாம்பவான்’ பிராட்மேனை சமன் செய்தார் இந்தியாவின் கோஹ்லி. இருவரும் தலா 8 முறை 150 ரன்னுக்கும் மேல் எடுத்தனர்.
சொந்தமண்ணில் பங்கேற்கும் டெஸ்டில், எதிரணிகளை 100 ஓவர்களுக்குள் தென் ஆப்ரிக்க அணி ‘ஆல் அவுட்’ செய்தது நேற்று 18 வது முறையாக நடந்தது. இதற்கு முன் 2016, செஞ்சூரியன் டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 104.2 ஓவர்கள் தாக்குப் பிடித்தது.
தொடரும் 150
கோஹ்லி இதுவரை 21 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். இதில், முதல் 11 சதங்கள், 150க்கும் குறைவாக எடுத்தார். அடுத்த 10 சதங்களில், 8 முறை 150 ரன்னுக்கும் மேல் எடுத்தார். மற்ற இரண்டில் (103, 104) அவுட்டாகாமல் இருந்தார்.
தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக ரன் :
தென் ஆப்ரிக்க மண்ணில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த மூன்றாவது ஆசிய வீரர் ஆனார் கோஹ்லி (153). முதல் இரு இடத்தில் இந்தியாவின் சச்சின் (169, கேப்டவுன், 1997 மற்றும் 155, புளோயம்போன்டைன், 2001), புஜாரா (153, ஜோகனஸ்பர்க், 2013) உள்ளனர்.