காயம் காரணமாக மேலும் ஒரு பேட்ஸ்மேன் விலகல்… தத்தளிக்கும் தென் ஆப்ரிக்கா
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து காயம் காரணமாக தென் ஆப்ரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் டி.காக் விலகியுள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில் இரு அணிகள் இடையேயான ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது.
இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்ரிக்கா அணியின் விக்கெட் கீப்பரான குவிண்டன் டி.காக் அணியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு பதிலாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஹென்ரிச் க்ளேசன் என்னும் புதுமுக வீரராக களமிறங்க உள்ளார்.
காயத்தில் இருந்து குவிண்டன் டி.காக் விரைவில் குணமடையும் பட்சத்தில், இரு அணிகள் இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையாக குணமடையாத பட்சத்தில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி.20 என முழு தொடரில் இருந்தும் விலகும் நிலை ஏற்படும்.
ஏற்கனவே காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஸ்டைன், அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் மற்றும் கேப்டன் டூ பிளசிஸ் என ஒவ்வொரு போட்டியிலும் ஒரு நட்சத்திர வீரர் வெளியாகி வரும் நிலையில், தற்போது டி.காக்க்கும் அணியில் இருந்து விலகுவதாக தென் ஆப்ரிக்கா அணிக்கு நிச்சயம் பெரும் பின்னடைவை தரும் என்பதில் சந்தேகமில்லை.