சாலைப் பாதுகாப்பைப் பிரதானப்படுத்தும் ரோட் சேஃப்டி வேர்ல்ட் சீரிஸ் தொடரில் விளையாட சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, சேவாக், காலிஸ், முரளிதரன் பிரட் லீ, ஷிவ்நரைன் சந்தர்பால் ஆகியோர் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதன் முதல் தொடர் பிப்ரவரி 2, 2020 முதல் பிப்ரவரி 16 வரை மும்பையில் நடைபெறும். டெஸ்ட் விளையாடும் அணிகளுக்கு இந்தத் தொடர் வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியன் லெஜன்ட்ஸ், ஆஸி. லெஜண்ட்ஸ், இலங்கை லெஜண்ட்ஸ், தென் ஆப்பிரிக்க லெஜண்ட்ஸ், வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்தத் தொடரில் ஓய்வு பெற்ற 110 வீரர்கள் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தொடரை புரொபஷனல் மேனேஜ்மெண்ட் குழுமமும் மஹாராஷ்டிரா சாலைப் பாதுகாப்புப் பிரிவும் சேர்ந்து நடத்துகின்றன. பிசிசிஐ இதற்கு அனுமதி அளித்துள்ளது.
பிரான்ச்சைஸ் மாதிரியில் தொடர் நடைபெறும். வீரர்கள் சம்பளம் உள்ளிட்டவைகளை அணி உரிமையாளர்கள் கவனித்துக் கொள்வார்கள். ஆனால் போட்டியில் கிடைக்கும் வருவாய் ரோட் சேஃப்டி செல் பயன்படுத்திக் கொள்ளும் என்று தெரிகிறது.
ஆகவே மீண்டும் இந்த லெஜண்ட்களை மட்டை, கால்காப்பு, ஹெல்மெட் இத்யாதிகளுடன் மைதானத்தில் ரசிகர்கள் காணவிருக்கிறார்கள்.
இந்நிலையில் உலகக் கோப்பைப் போட்டியில் கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவர் விதிமுறையை ஐசிசி நீக்கியுள்ளது. துபாயில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் இதுதொடர்பாகப் புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சூப்பர் ஓவரும் டை-யில் முடிவடைந்தால் பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றி பெறும் அணியைத் தேர்வு செய்யும் பழைய நடைமுறை நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, உலகக் கோப்பைப் போட்டிகளில் சூப்பர் ஓவரும் டை-யில் முடிந்தால் முடிவு எட்டப்படும்வரை சூப்பர் ஓவர்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 50 ஓவர், டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் எந்த ஆட்டம் டை-யில் முடிந்தாலும் சூப்பர் ஓவர் அடிப்படையில் வெற்றி பெறும் அணி முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, நாக் அவுட் ஆட்டங்களில் மட்டுமே சூப்பர் ஓவர் நடைமுறை இருந்தது. லீக் போட்டிகளில் சூப்பர் ஓவரும் டை-யில் முடிந்தால் புள்ளிகள் இரு அணிகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும்.