சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்களை சர்வதேச கிரிக்கெட்டில் எடுத்துள்ளார். 100 சதங்களை எடுத்த ஒரே சர்வதேச கிரிக்கெட் வீரரும் சச்சின் டெண்டுல்கர்தான்.
எத்தனையோ ஷார்ட் பிட்ச் பந்துகளை, பவுன்சர்களை அவர் சிக்சருக்குப் பறக்க விட்டுள்ளார், குறிப்பாக ஆரம்பக் காலங்களில் கார்ட்னி வால்ஷ், கென்னத் பெஞ்சமின், இயன் பிஷப், மெர்வின் டிலான், மெக்ரா, ஆலன் டோனால்டு, ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல், பிளிண்டாஃப், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ்,ஆண்ட்ரூ கேடிக்.. பட்டியல் நீளம்.. ஆகியோரது ஷார்ட் பிட்ச் பந்துகளை வெளுத்துக் கட்டியுள்ளார்.
ஆனால் ஆஸ்திரேலிய பிட்ச்களில் தன்னால் ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்ள முடியவில்லை என்று தன்னிடம் சச்சின் டெண்டுல்கர் ஒருமுறை கூறியதாக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷான் போலாக் தற்போது தெரிவித்துள்ளார்.
ஸ்கை ஸ்போர்ட்ஸுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் ஷான் போலக் கூறும்போது, “ஒருமுறை என்னிடம் சச்சின் கூறினார், ஆஸ்திரேலியாவில் தன்னால் ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்ள கடினமாக இருந்தது என்றும் அங்கு புரிந்து கொள்வது கடினம் என்றும் கூறினார். அதனால்தான் புல்ஷாட், ஹூக் ஷாட்டுகளுக்குப் பதிலாக ஸ்லிப், விக்கெட் கீப்பருக்கு மேல் தூக்கி விடும் ஷாட்டை ஆடியதாகவும் அவர் என்னிடம் கூறினார்.
ஆனால் சில வேளைகளில் குறிப்பாக இந்தியாவில் இவரை வீழ்த்த நாங்கள் கடினமாக உணர்ந்திருக்கிறோம் அவரே தவறு செய்வார் என்று முடிவெடுத்து விடிவோம்” என்றார் ஷான் போலாக்