ஐசிசி-க்கு எதிராக போராட்டம் செய்யும் சச்சின், லாரா போன்ற ஜாம்பவான்கள்; காரணம் இதுதான்!

ஐசிசி-க்கு எதிராக போராட்டம் செய்யும் சச்சின், லாரா போன்ற ஜாம்பவான்கள்; காரணம் இதுதான்!

ஐசிசி-யின் ‘அம்பயர்ஸ் கால்’ என்கிற விதிமுறைக்கு மாற்றம் கொண்டுவரக்கோரி ட்விட்டரில் போராட்டத்தை துவங்கியுள்ளார் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இதற்க்கு முன்னாள் வீரர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் எல்.பி.டபிள்யு முறையில் அவுட் அல்லது அவுட் இல்லை என களத்தில் இருக்கும் நடுவரால் அறிவிக்கப்பட்டால், டி.ஆர்.எஸ் முறைப்படி மூன்றாம் நடுவரிடம் மேல்முறையீடு செய்து களத்தில் உள்ள நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யலாம்.

அதில், பால் ட்ராக்கிங் என்கிற முறை பயன்படுத்தப்படும். இதனைக்கொண்டு பந்து எந்த அளவிற்கு ஸ்டம்பை தாக்கியுள்ளது என தோராயமாக கணக்கிடப்படும். பந்தானது 50 சதவீதற்கும் குறைவான அளவிலேயே ஸ்டம்ப்பை தாக்கும் பட்சத்தில் ‘அம்பயர்ஸ் கால்’ எனப்படும் களநடுவரின் முடிவுக்கே விட்டுவிடப்படும். அதாவது, களத்தில் இருக்கும் நடுவர் அவுட் கொடுத்திருந்தால் அவுட். இல்லையென்றால், இல்லை என்பதாகும்.

இந்த விதிமுறைக்கு முன்னதாகவே பல சர்ச்சைகள் விமர்சனங்கள் எழுந்தன. பந்து ஸ்டம்பை எப்படி தாக்கினாலும் அவுட் தானே? என கேள்விகளும் முன்வைக்கப்பட்டன. இதற்க்கு ஐசிசி எவ்வித பதிலும் அளிக்கவில்லை. செவிசாய்க்கவில்லை என்றே கூறவேண்டும்.

இந்நிலையில், இந்த விதிமுறையை மாற்றக்கோரி இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் குரல் கொடுத்துள்ளார். இதற்க்கு முன்னாள் வீரர்கள் லாரா, ஹர்பஜன் சிங் போன்றோர்கள் ஆதரவு தெரிவித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டிருந்தனர்.

சச்சின் பதிவிட்ட ட்விட்டில், “ஐசிசி யின் டி.ஆர்.எஸ். முறையில் ஒருசில விஷயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. எல்.பி.டபிள்யு. அப்பீல் செய்யும் போது,  பந்தின் 50 சதவீத பகுதி அல்லது அதற்கும் மேல் என ஸ்டம்பில் தாக்கினால் மட்டுமே அவுட் என தரப்படுகிறது. இல்லையெனில் அம்பையர்ஸ் கால் என கள நடுவரின் முடிவிற்கு செல்லப்படுகிறது.

இதனால் பவுலர்களும், பேட்ஸ்மேன்களும் அதிருப்தி அடைந்து, ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடுகிறது. இது நியாயமற்றதாகவும் உள்ளது. டென்னிஸ்  போட்டிகளில் எப்படி அப்பீல் செய்தால் ஹாக் ஐ முறையில் பந்து கோட்டில் பட்டதா? அல்லது வெளியே சென்றதா? என தெளிவாக சொல்கிறார்களோ! அதுபோல கிரிக்கெட்டில் பந்து ஸ்டம்பில் பட்டுவிட்டால் அவுட் தர வேண்டும். சதவீத கணக்குகளை வைத்து இரண்டுக்கும் இடைப்பட்ட முறையில் தீர்ப்பு வழங்குதல் கூடாது. அது சரியானதும் இல்லை.” என்றார்.

Prabhu Soundar:

This website uses cookies.