ஆஷஸ் தொடரில் 3-வது சதம் விளாசிய ஸ்மித்தை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
கிரிக்கெட்டில் இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படுபவர்களில் ஒருவர் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித். தென்ஆப்பிரிக்கா தொடரின்போது கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்டில் பான் கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது. ஸ்மித் கேப்டனாக இருந்ததால், குற்றச்சாட்டில் இணைக்கப்பட்டார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி ஸ்மித், வார்னர், பான் கிராப்ட் ஆகியோருக்கு தடைவிதித்தது. ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு தலா ஒரு வருடம் தடைவிதிக்கப்பட்டது.
தடைக்காலம் முடிந்து ஸ்மித் ஆஷஸ் தொடரில் அறிமுகமானார். எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார். லார்ட்ஸ் டெஸ்டின் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்தார். தற்போது நடைபெற்று வரும் ஓல்டு டிராபோர்டு டெஸ்டில் சதம் அடித்துள்ளார்.
2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் பந்தினால் தாக்கப்பட்ட ஸ்மித் ஓய்விற்கு பிறகு இப்போட்டியில் களமிறங்கினார். இவர் இந்தப் போட்டியில் தனது சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்தப் போட்டியில் தனது 26ஆவது சதத்தை கடந்து ஸ்மித் விளையாடி வருகிறார். இதன்மூலம் குறைவான இன்னிங்ஸில் 26 சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ஸ்மித் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
இப்பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்த இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஸ்மித் முறியடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 136 இன்னிங்ஸில் 26 சதங்களை எட்டியிருந்தார். ஆனால் ஸ்டீவ் ஸ்மித் 121 இன்னிங்ஸில் தனது 26ஆவது சதத்தை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்பிறகும் ஸ்மித் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தார்.
டெஸ்ட் போட்டிகளில் தனது மூன்றாவது இரட்டை சதத்தையும் ஸ்மித் பதிவு செய்தார். இவர் 310 பந்துகளில் 200 ரன்களை கடந்து அசத்தினார். டெஸ்ட் போட்டி வரலாற்றில் ஸ்மித் அடித்துள்ள மூன்று இரட்டை சதங்களும் இங்கிலாந்து அணிக்கு எதிராகவே என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் ஸ்மித் 319 பந்துகளில் 24 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உதவியுடன் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் ஸ்மித்தை சச்சின் தெண்டுல்கர் வெகுவாக பாராட்டியுள்ளார். ஸ்மித் ஆட்டத்தை வெகுவாக பராட்டி சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘புரிந்துகொள்ள முடியாத டெக்னிக். ஒழுங்கமைக்கப்பட்ட மனநிலை மற்ற பேட்ஸ்மேன்களிடம் இருந்து தனித்து காட்டுகிறது. நம்பமுடியாத வகையிலான comeback!’’ என்று பதிவிட்டுள்ளார்.