முக்கியமான தொடரின் போது தாவனுக்கு ஏற்பட்ட காயம் தன் இதயத்தையே நொறுக்கிவிட்டது என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் அபாரமாக சதமடித்தார். அந்தப் போட்டியின்போது, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பந்து, தவானின் இடது கை பெருவிரலை பலமாகத் தாக்கியது. பின்னர், காயம் காரணமாக அடுத்த சில போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என அறிவிப்பு வெளியானது. ஆனால் பின்னர், ஷிகர் தவான் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இது இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய அணி வீரர்களுக்கும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து வீடியோ வெளியிட்ட ஷிகர், ”நம்முடைய நாட்டிற்காக உலகக் கோப்பை தொடரில் விளையாட விரும்பினேன். நான் இப்போது சிகிச்சைக்காக திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது” என உருக்கமாக தெரிவித்தார்.
ஷிகர் தவான் விலகியதால் அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் சேர்க்கப்படுவார் என்றும் பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் தவானின் விலகல் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுகல்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ” உங்களுக்காக வருத்தப்படுகிறேன் ஷிகர். நீங்கள் நன்றாக விளையாடினீர்கள். முக்கியமான தொடரில் உங்களுக்கு காயம் ஏற்பட்டது இதயத்தையே நொறுக்கிவிட்டது. நீங்கள் நிச்சயம் மீண்டு வருவீர்கள்.
நீங்கள் நன்றாக விளையாடி வருகிறீர்கள் ரிஷப் பண்ட். உங்கள் திறமையை நிரூபிக்க மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.
பயமின்றி பந்துகளை சிக்ஸர்களுக்கு விளாசி, பந்துவீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்குபவர் தான் இளம் வீரர் ரிஷப் பந்த். ஐபிஎல் போட்டிகளில் தனக்கே உரித்தான அதிரடி ஆட்டத்தின் மூலம் உலக அரங்கில் வெளிச்சம் பெற்றார். கடந்த ஆண்டு அவர் ஹைதராபாத் அணிக்கு எதிராக ருத்ரதாண்டவ ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் எவரும் எளிதில் மறக்க மாட்டார்கள்.
உள்ளூர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இந்திய அணிக்கு சேர்க்கப்பட்டார் பந்த். பலமான அணிகளான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சதமடித்து சர்வதேச கிரிக்கெட் உலகை தன்னை நோக்கி திரும்ப செய்தார். குறிப்பாக கடந்த ஆண்டு, இங்கிலாந்துக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை அடித்து அமர்க்களப்படுத்தினார்.
அன்று முதல் இன்று வரை இந்திய டெஸ்ட் அணிக்கு முதன்மை விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார் பந்த். இருப்பினும் உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது, ரிஷப் பந்திற்கு ஏமாற்றமே கிடைத்தது. அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட ரிஷப் பந்தின் பெயர் ரிசர்வ் வீரராகவே சேர்க்கப்பட்டது.
இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பை தொடரிலிருந்து ஷிகர் தவான் காயம் காரணமாக நீக்கப்பட அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் ரிஷப். 21 வயதான ரிஷப் பந்தின், உலகக்கோப்பை அணியில் இடம் பெறும் கனவு நனவாகியுள்ள நிலையில், ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.