சச்சினின் மகன் பேரில் டுவிட்டரில் போலியான கணக்குகள் இருப்பதால், அதனை நீக்கக்கோரி ட்விட்டர் இந்தியா நிறுவனத்திற்கு சச்சின் டெண்டுல்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அண்டர் 19 இந்திய அணிக்காக ஒரு சில போட்டியில் ஆடினார். அதன்பிறகு இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட அண்டர் 19 அணியில் இடம்பெற்று நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார்.
மும்பை அண்டர் 19 அணியின் முன்னணி ஆல்-ரவுண்டராக இருந்து வந்த அர்ஜுன் டெண்டுல்கர், மும்பை அண்டர் 23 அணியில் அண்மையில் சேர்க்கப்பட்டார்.
இவருக்கு எந்தவொரு சமூகவலைதளங்களிலும் தனி பக்கங்கள் இல்லை. இதற்கிடையில், ட்விட்டரில் அர்ஜுன் டெண்டுல்கர் என்ற பெயரில் இயங்கிவரும் போலி கணக்கு ஒன்றில் சில கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் மற்ற மாநில அணிகள் குறித்து சில சர்ச்சையான பதிவுகள் போடப்பட்டு வந்தன.
இதனை கண்ட அவரது தந்தை சச்சின் டெண்டுல்கர், தனது மகனுக்கு ட்விட்டரில் எந்த ஒரு கணக்குகளும் இல்லை என தெரிவித்து, எனது மகன் பெயரில் இயக்கப்பட்டு வரும் போலி கணக்கினை விரைவில் நீக்கக்கோரி இந்திய ட்விட்டர் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்ததாவது:
என் மகனோ மகளோ ட்விட்டரில் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். @jr_tendulkar என்கிற இந்த ட்விட்டர் கணக்கு, என் மகனுடையது என்பது போலச் சித்தரித்து – நிறுவனங்கள் மற்றும் பிரபலங்களைப் பற்றி தவறான நோக்கத்துடன் பதிவிடுகிறது. இதுகுறித்து ட்விட்டர் இந்தியா நிறுவனம் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.