சூப்பர் ஓவர் பிரச்சனை வந்தால் இனி இதனை செய்யுங்கள்: சச்சின் டெண்டுல்கர் புதிய யோசனை!!

சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தால் பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றியைத் தீர்மானிக்காமல் இன்னொரு சூப்பர் ஓவரை கடைபிடிக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான சூப்பர் ஓவரும் சமனில் முடிய, அதிக பவுண்டரிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இறுதி ஆட்டத்தில் தோல்வியடையாத பட்சத்திலும் நியூஸிலாந்து அணி கோப்பையை இழந்தது சர்வதேச அளவில் மிகப் பெரிய பேசுபொருளாக அமைந்தது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள், மற்ற கிரிக்கெட் வீரர்கள் என பல தரப்பில் பல கருத்துகளும் விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

இந்த நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது,

“இரண்டு அணிகள் அடித்த பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றியைத் தீர்மானிக்காமல் மற்றொரு சூப்பர் ஓவரை நடத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். உலகக் கோப்பையில் மட்டுமல்ல. அனைத்து ஆட்டங்களுமே முக்கியமானது. கால்பந்தைப் போல், கூடுதல் நேரத்துக்கு ஆட்டம் சென்றால் அது பெரிய பிரச்னை கிடையாது” என்றார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு எலிமினேட்டர் வாய்ப்பு இருப்பது போல், உலகக் கோப்பை போன்ற தொடர்களிலும் புதிய நடைமுறையை கொண்டுவரலாம் என்று விராட் கோலி அரையிறுதி ஆட்டத்துக்குப் பிறகு பேசியதையே சச்சின் டெண்டுல்கரும் தெரிவிக்கிறார். இதுகுறித்து, அவர் பேசுகையில்,

“முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு, தொடர் முழுவதும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக இரண்டாவது வாய்ப்பாக ஏதேனும் இருக்க வேண்டும்” என்றார்.

உலகக் கோப்பை அரையிறுதியில் தோனியை 7-வது வரிசையில் களமிறக்கியது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

“நான் தோனியை அவரது வழக்கமான வரிசையான 5-வது வரிசையில் தான் களமிறக்கியிருப்பேன். இந்திய அணி அப்போது இருந்த சூழ்நிலை மற்றும் அவருக்கு இருக்கும் அனுபவத்தைக் கருத்தில் கொள்ளும்போது, இன்னிங்ஸை கட்டமைக்க அது தோனிக்கான நேரம். ஹார்திக் பாண்டியா 6-வது இடத்திலும், அவரைத்தொடர்ந்து தினேஷ் கார்த்திக் 7-வது இடத்திலும் களமிறங்கியிருக்க வேண்டும்” என்றார்.

Sathish Kumar:

This website uses cookies.