ஊரடங்கின் போது மகேந்திர சிங் தோனியின் அனுபவத்தை சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக மார்ச் 29-ம் தேதி நடைபெற இருந்த ஐ.பி.எல் போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதால் ஐ.பி.எல் தொடர் எப்போது தொடங்கும் என்று இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதுமில்லை. இதனிடையே ஊரடங்கு நேரத்தில் வீட்டில் ஓய்வில் உள்ள வீரர்கள் தங்கள் அனுபவத்தை வீடியோ மற்றும் புகைப்படமாக பதிவிட்டு வந்தனர்.
விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகார் தவான், ரவீந்திர ஜடேஜா என பலரும் தங்களது அனுபவத்தை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வந்தனர். தோனி ஊரடங்கின் போது என்ன செய்து வருகிறார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் சாக்ஷி தனது இன்ஸ்டாகிராமில் தோனியின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தை சி.எஸ்.கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த புகைப்படத்தில் தோனி ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் தோட்ட வேலை செய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்தார். தோட்டதில் உள்ள புல்லை சீர்ப்படுத்தி கொண்டிருந்தார். உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின் இந்திய அணியில் இடம்பெறாத தோனி, ஐ.பி.எல் போட்டியில் விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால் கடைசியில் கொரோனா வைரஸ் காரணமாக ஐ.பி.எல் தொடர் தடைப்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாகவே இருந்தது.