கை காலை வச்சிக்கிட்டு சும்மா இல்லாம, எதிரணி வீரரை வம்பிழுத்த சுட்டி குழந்தை – தலையில் குட்டு வைத்த ஐசிசி!

எதிரணி வீரரிடம் சென்று வன்முறையை தூண்டும் விதமாக விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடியதற்காக சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐசிசி.

மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க தென் ஆப்பிரிக்காவிற்கு சென்றுள்ள இங்கிலாந்து அணி, முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளை விளையாடிவிட்டது. இந்த இரண்டு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுவிட்டது.

இந்த ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியின்போது மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து வீரர்களுக்கு இடையே சில முட்டல் மோதல்கள் நிகழ்ந்துள்ளது. இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா 109(102) ரன்கள் அடித்து சாம் கர்ரன் பந்தில் போல்டாகி வெளியேறினார்.

டெம்பா பவுமாவின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு நேரடியாக அவரை நோக்கி ஓடிச்சென்று ஆக்ரோஷமாக கொண்டாடினார் சாம் கர்ரன். இவரின் இந்த செயல் பல விமர்சனங்களை சந்தித்தது. மேலும் இந்த விவகாரம் பற்றி அறிந்து கொண்ட ஐசிசி, சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஐசிசி விதிமுறைப்படி, எதிரணி வீரர்களின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு அவர்களின் கோபத்தை தூண்டும் வகையில் ஆக்ரோஷமாக கொண்டாடுவது முறையற்ற செயலாக பார்க்கப்படுகிறது. இது போன்ற ஒரு செயலை செய்திருக்கிறார் சாம் கர்ரன் ஆகையால் போட்டியிலிருந்து 15 சதவீதம் சம்பளப்பணம் ஐசிசி-யால் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் மெரிட் புள்ளிகளில் இருந்து ஒரு புள்ளியும் குறைக்கப்பட்டிருக்கிறது. சாம் கர்ரனுக்கு மெரிட் புள்ளிகள் குறைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதுபோன்று அடுத்த 24 மாதங்களுக்குள் நான்கு முறை குறைக்கப்பட நேரிட்டால், ஓராண்டு காலம் சர்வதேச போட்டிகளில் இருந்து அந்த வீரர் விளையாட தடை செய்யப்படுவார். இந்த விதிமுறையும் ஐசிசி கோட்பாடுகளில் இருக்கிறது.

இதே இரண்டாவது ஒருநாள் போட்டியில் இன்னொரு சம்பவமும் நடந்திருக்கிறது. அது தென்னாபிரிக்க அணியின் பேட்ஸ்மேன் வான் டர் டசன் மற்றும் ஜோஸ் பட்லர் இடையே நடந்தது ஆகும். வான் டர் டசன் அடித்த பந்து பேட்டில் படாமல் நேரடியாக சென்றது. அவர் பேட்டில் பட்டது என்று நினைத்து களத்தில் இருந்து நடுவரிடம் அவுட் என கேட்டுள்ளார் பட்லர்.

அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. அதில் சில தவறான வார்த்தைகளும் பகிரப்பட்டது. இந்த வாக்குவாதம் சண்டையாக முடிந்து விடக்கூடாது என உடனடியாக அங்கே இருந்த நடுவர் இவர்களை தடுத்து சாந்தம் ஆக்கினார்.

இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 342 ரன்கள் அடித்திருந்தது. இலக்கை சேஸ் செய்த தென்னாபிரிக்கா அணி 347 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.