என்னை ஏன் கமெண்டரியில் இருந்து தூக்கி எறிந்தார்கள் – கடைசியாக வாயைத் திறந்த சஞ்சய் மஞ்சுரேக்கர்!
பிசிசிஐ கமெண்டரி பேனலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கடைசியாக மௌனம் கலைத்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பிசிசிஐ அதிகாரப்பூர்வ கமெண்டரி பேனலில் கடந்த சில ஆண்டுகளாக இடம்பெற்று வந்தார். இவரது போட்டியின் கமெண்டரிகள் ஓரிரு ஆண்டுகளாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வந்தன.
குறிப்பாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு லிமிடெட் ஒவர் போட்டிகளில் இடம்பெற்ற ஜடேஜாவின் ஆட்டம் குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இவரது கமெண்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜடேஜா அபாரமாக விளையாடியும் சில போட்டிகளில் அரைசதமும் அடித்திருந்தார்.
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கமெண்டரிகள் மீது நெட்டிசன்கள் கடும் கோபம்கொண்டு கலாய்க்க துவங்கினர்.
அத்தோடு விட்டுவிடாமல் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ரஞ்சி போட்டிகளில் மும்பை அணிக்காக மட்டுமே தொடர்ந்து பேசியிருக்கிறார். இந்திய அணியில் ஒரு சில வீரர்களை புகழ்ந்தும் ஒரு சில வீரர்களை இகழ்ந்தும் பேசி வந்ததால் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கமெண்டரி நடுநிலையாக இல்லையென பிசிசிஐக்கு ரசிகர்கள் பலர் புகார் அளித்து வந்தனர்.
இதற்கிடையில் வரும் ஆண்டில் பிசிசிஐ அமைப்பின் அதிகாரப்பூர்வ கமெண்டரி பேனலில் இருந்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார். ஐபிஎல் தொடர்களிலும் கமெண்டரி செய்ய தற்போது வரை அனுமதி அளிக்கப்படவில்லை.
இனி நிலையில் நான் நீக்கப்பட்டது குறித்து மௌனம் கலைத்திருக்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில்,
“நான் கமெண்டரியை எனது பாக்கியமாக நினைக்கிறேன். ஆனால் ஒருபோதும் எனது சொத்தாக மனதில் எடுத்துக் கொண்டதில்லை. நான் கமெண்டரி பேனலில் இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பது முழுக்க முழுக்க மேலிடம் சார்ந்தது. அவர்களது முடிவை மதிக்கிறேன். நான் கமெண்டரி செய்த விதம் பிசிசிஐ தரப்பிற்கு மகிழ்ச்சி அளிக்காமல் இருக்கலாம். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.” என்றார்