என்னங்கடா விளையாடுறீங்க..? கடுப்பான சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சொதப்பிய ரிஷப் பண்ட் மற்றும் விஜய் சங்கரை, முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முழுவதுமாக கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது.
இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டி டெல்லி பிரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தின் மூலம் நேற்றைய போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தொடரையும் இழந்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கிவிட்ட நிலையில், இந்திய அணியின் இந்த படுதோல்வி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் இந்த தொடர் குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இளம் வீரர்களான விஜய் சங்கர் மற்றும் ரிஷப் பண்ட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், விஜய், ரிஷப் பண்ட் அல்ல. அவர் அவரது கேப்டனைப் போல தரையோடு அடித்து ஆடி ஸ்ட்ரைக் ரேட்டை வளர்ப்பது எப்படி என கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறி உள்ளார்.