யோ – யோ டெஸ்டில் தேர்ச்சி பெற்றார் சஞ்சு சாம்சன்
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான சஞ்சு சாம்சன் பெங்களூரில் நேற்று நடைபெற்ற யோ – யோ டெஸ்டில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய சஞ்சு சாம்சன், 441 ரன்கள் எடுத்து, தன் திறமையை நிரூபித்தார். இதன் மூலம், அவர் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், இந்தியா “ஏ” அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், இந்தியா “ஏ” அணிக்கான போட்டிகள் தொடங்கும் முன்பு யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாததால், அணியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டார்.
இவரைப் போன்றே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டும், உடற்தகுதிக்கான யோ-யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததால், அம்பத்தி ராயுடு மற்றும் முகம்மது ஷமி ஆகியோர் அணியில் ஆடும் வாய்ப்பை இழந்தனர்.
இதைத் தொடர்ந்து, யோ-யோ டெஸ்ட் குறித்த சர்ச்சை வெடித்தது. சில முன்னாள் வீரர்கள் யோ-யோ டெஸ்ட் தேவைதானா? என கேட்க பலரும் தங்கள் கருத்துக்களை கூற ஆரம்பித்தனர். ஐபிஎல்-இல் ரன் குவித்த வீரர்களுக்கு உடற்தகுதி இல்லை என்று சொல்வது வேடிக்கையாக இருப்பதாக சிலர் கூறினர்.
இந்த நிலையில், மீண்டும் யோ-யோ டெஸ்டில் பங்கேற்ற சஞ்சு சாம்சன், 17.3 புள்ளிகள் பெற்று தேர்வு பெற்றார். யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 16.1 புள்ளிகள் எடுத்து இருக்க வேண்டும். முன்னதாக, சஞ்சு சாம்சன் 15.6 புள்ளிகள் பெற்று தோல்வி அடைந்திருந்தார்.
யோ டெஸ்டில் தேர்வானது குறித்து சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அதில் யோ யோ தேர்வில் தான் எடுத்த மதிப்பெண்ணையும் பதிவிட்டுள்ளார்.
தற்போது, உடற்தகுதியை நிரூபித்துள்ள சஞ்சு சாம்சனுக்கு, விரைவில் இந்திய “ஏ” அணியில் ஆட வாய்ப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.