இவங்க ரெண்டு பேரால தான் எனக்கு இடமில்லாம போச்சா? – கடைசியாக வாயை திறந்த சஞ்சு சாம்சன்!

டி20 உலக கோப்பை அணியில் எடுக்கப்படாதது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார் சஞ்சு சாம்சன்.

ஏதேனும் ஒரு பெரிய தொடர் வரும்பொழுது அதில் சஞ்சு சாம்சன் எடுக்கப்படவில்லை என்றால், அது குறித்த விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள் சமூக வலைதளங்களில் ஏற்படுவது தற்போது வாடிக்கையாக மாறியுள்ளது.

2013 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடும் சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் அணிக்கு நம்பிக்கை தரும் வீரராக தொடர்ந்து இருந்து வருகிறார். அந்த அணி நிர்வாகமும் அவர் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பொறுப்பையும் கொடுத்துள்ளது. 2014 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம்பெற்ற இவர், அதன்பிறகு 2019 ஆம் ஆண்டு தான் மீண்டும் இந்திய அணிக்குள் இடம் பிடித்தார். 2021 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கான இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதன் பிறகு எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. ஆகையால் அவ்வபோது உள்ளே வருவதும் வெளியே செல்வதுமாக இருந்தார்.

இதுவரை 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருக்கிறார். 296 ரன்கள் மட்டுமே அடித்து, சராசரி 21 மட்டுமே வைத்திருப்பது கூடுதல் பின்னடைவாக உள்ளது. இவருக்கு இணையான வீரர்களாக பார்க்கப்படும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பன்ட் இருவரும் தொடர்ந்து சொதப்பலாக விளையாடினாலும், அவர்களுக்கே வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் அவர்களுக்கு தொடர்ந்து பக்கபலமாக இருக்கின்றனர் என்பதும் கூடுதல் விமர்சனமாக எழுந்திருக்கிறது.

இது ஒவ்வொரு காலகட்டத்திலும் நடக்கும் ஒன்றுதான். 2012 மற்றும் 21013ல் ரோகித் சர்மா மிகவும் மோசமாக ஆடிவந்தபோது, தோனி நம்பிக்கைவைத்து அவரை தக்க வைத்தார். மேலும் அஸ்வின், விராட் கோலி, ஜடேஜா போன்ற வீரர்கள் சோதப்பியபோதும் அவர்களை தோனி தக்க வைத்துள்ளார். அதன்பிறகு தற்போது வரை அவர்கள் இந்திய அணிக்கு எந்த அளவிற்கு பங்காற்றியுள்ளனர் என்பது உலகறியும். அது போல தான் தற்போது கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர் என கணித்துக்கொள்ளலாம்.

டி20 உலக கோப்பை அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் சமீபத்தில் அவர் விளையாடி வரும் விதம் திருப்தி அளிப்பதாக இருக்கிறது. ஆனால் அவருக்கு உலக கோப்பை அணியில் இடம் கொடுக்கவில்லை. உலககோப்பை அணி வெளியிடப்பட்டு 4 நாட்கள் ஆகியும் சஞ்சு சாம்சன் எதுவும் பேசாமல் இருந்தார். என்ன வருத்தத்தில் இருக்கிறார்? என்று பலரும் கேள்வி எழுப்பினர். கடைசியாக, செப்டம்பர் 16ஆம் தேதி இணையதள செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இந்திய அணியில் இடம் பெறாதது குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

“சமீப காலமாக இணையதளங்களில், குறிப்பாக சமூக வலைதளங்களில், சஞ்சு சாம்சன் யாருக்கு பதிலாக இந்திய அணிக்குள் வருவார்? அல்லது கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பன்ட் இருவரில் யார் இடத்தில் சஞ்சு சாம்சன் வருவார்? என்று தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. மேலும் அதை என்னிடமும் கேட்கின்றனர். என்னுடைய எண்ணம் எல்லாம் ஒன்று மட்டும்தான். கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பன்ட் இருவரும் எனது நாட்டிற்காகவும் எனது அணிக்காகவும் விளையாடுகின்றனர். அவர்களுடன் நான் போட்டி போட்டால், நான் எனது நாட்டு வீரர்களையும் எனது அணியையும் விட்டுக் கொடுக்கிறேன் என்று அர்த்தமாகி விடும். முதலில் எனது அணி ஜெயிக்க வேண்டும் என்பதே என் எண்ணம். பிறகு தான் நான் என்னை பற்றி யோசிப்பேன்.”

“ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் இந்திய அணிக்கு அறிமுகமானபோது, அப்போது இந்தியா முதல் இடத்தில் இருந்தது. மீண்டும் தற்போது நான் இந்திய அணிக்குள் திரும்பும் பொழுது, இந்திய அணி முதல் இடத்தில் இருக்கிறது. ஆகையால் இந்திய அணி சிறந்த வீரர்களின் கையில் தான் இருக்கிறது. நான் என்னையும் எனது மனநிலையையும் நல்லபடியாக வைத்திருக்க கவனம் செலுத்தி வருகிறேன். நான் யாருக்கும் போட்டியாக இங்கே இல்லை. என்னை நான் வளர்த்துக் கொள்ளவே முற்படுகிறேன். மீண்டும் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு என்னால் முடிந்தவற்றை நான் செய்வேன். முயற்சி மட்டுமே என் கையில் இருக்கிறது. முடிவு என் கையில் இல்லை என்பதால் நான் வேறு எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. ரசிகர்களும் கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.