மீதமுள்ள டி20 போட்டிகளில் இருந்து சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இலங்கை அணியுடன் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது டி20 போட்டி புனே மைதானத்தில் நடக்க உள்ளது. முதல் டி20 போட்டியில் இடம் பெற்றிருந்த சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. 5 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டம் இழந்தார்.
பேட்டிங் போல, பீல்டிங்கிலும் அவருக்கு சிறந்த நாளாக அமையவில்லை. ஏனெனில் முதல் ஓவரிலேயே ஹர்திக் பாண்டியா பந்தில் இலங்கை அணியின் துவக்க வீரர் நிஷாங்கா அடித்த பந்து சஞ்சு சாம்சனிடம் சென்றது. அதை தாவிப்பிடித்துவிட்டு கீழே விழுந்தபோது பந்து கையை விட்டு நழுவிச் சென்றது.
அப்போது சஞ்சு சாம்சன் மூட்டு பகுதியில் பலத்த அடிபட்டுள்ளது. போட்டியின்போது எதையும் காட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து பீல்டிங் செய்தார். போட்டி முடிந்த பிறகு பெவிலியன் நோக்கி சென்றபோது அவரது காலில் பெரிய வீக்கம் ஏற்பட்டிருக்கிறது.
உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டு ஸ்கேன் செய்துள்ளனர். அதன்பின் வெளியான முழு மருத்துவ அறிக்கையில் இடதுகாலில் காயம் தீவிரமாக இருக்கிறது. சில நாட்கள் ஓய்வு தேவை என அறிவுறுத்தப்பட்டுலளது. அதன்படி டி20 தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரில் உள்ள இந்திய தேசிய அகடமிக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை மற்றும் பயிற்சியில் ஈடுபடும்படி பிசிசிஐ சஞ்சு சாம்சன்-க்கு தகவல் தெரிவித்துள்ளது. மும்பையில் மருத்துவமனையில் இருக்கும் அவர் விரைவில் பெங்களூரு செல்லவிருக்கிறார்.
சஞ்சு சாம்சன்-க்கு மாற்று வீரராக விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நேரடியாக புனே சென்று இந்திய அணியுடன் இணையவுள்ளார்.
2வது டி20ல் சஞ்சு சாம்சன் இடத்திற்கு பிளேயிங் லெவனில் வாஷிங்டன் சுந்தர் அல்லது ராகுல் திரிப்பாதி இருவரில் ஒருவர் உள்ளே எடுத்து வரப்படலாம் என்ற கணிப்பும் நிலவுகிறது.
அதேபோல் முதல் டி20 போட்டியில் சோதப்பலான பீல்டிங் மற்றும் பவுலிங் செய்த யுஸ்வேந்திர சஹல் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருப்பது சந்தேகம். அதற்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் உள்ளே வருவதற்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.